"அனைத்து முருகன் கோவில்களிலும் தீபம் ஏற்றி சுற்றி வாங்க" - பாஜகவினருக்கு நயினார் வைத்த வேண்டுகோள்!
தஞ்சாவூர்: "தமிழகத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும், வெள்ளிக்கிழமை தோறும், குடும்பமாக சென்று தீபம் ஏற்றி பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும்" என பாஜகவினருக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் காா்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. மாறாக, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மதுரை நோக்கி வந்த பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தஞ்சாவூரில் நேற்று பாஜக சார்பில் 'ஜனநாயகத்தை காப்போம், கும்பல் ஆதிக்கத்தை அகற்று வோம்' என்ற பெயரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "கடந்த திமுக ஆட்சியில், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற மறுத்ததால், அந்த ஆட்சி வீட்டிற்கு சென்றது. தவெகவும் விரைவில் வீட்டிற்கு செல்லும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நிச்சயமாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியே தீருவோம்.
வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து, வெள்ளிக்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், குடும்பம் குடும்பமாக அனைவரும் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றி, பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும். அறுபடை வீடுகளுக்கு, விரைவில் நான் பயணிக்க உள்ளேன். திருப்பரங்குன்றம் விவகாரத்தை வீதிவீதியாக கொண்டு செல்வோம்" எனப் பேசினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், மாவட்ட ஆட்சியரும் கோயில் நிர்வாகமும் இணைந்து நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றும் வரை பாரதிய ஜனதா கட்சியினர் ஒவ்வொருவரும் வெள்ளிக்கிழமையும் தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தீபம் ஏற்றி, பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
