பென்டிரைவில் சிக்கிய ஆபாச வீடியோ.. ஜெம் வீரமணி, சாந்தி வழக்கில் 18 சிறுமிகள்! போலீஸ் புதிய தகவல்
சென்னை: கிரானைட் தொழிலில் நாடு முழுவதும் பிரபலமான ஜெம் வீரமணி தொடர்பான வழக்கில், விசாரணையில் பல ஷாக்கிங் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. பென்டிரைவில் சிக்கிய வீடியோவில் தொடங்கிய இந்த வழக்கில், இதுவரை 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் சாந்தியின் தொடர்பு என்ன? போலீசார் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் என்ன?
இந்திய அளவில் கிரானைட் தொழிலில் பிரபலமான தொழிலதிபர் ஆர். வீரமணி. ஜெம் குழும நிறுவனங்களின் தலைவரான இவர், "ஜெம்" வீரமணி என்றே அழைக்கப்படுகிறார்.

கிரானைட் தொழில் சார்ந்த பல்வேறு அமைப்புகளிலும் பொறுப்பு வகித்துள்ள இவர், இந்த துறையில் செல்வாக்கு மிக்கவராகவே வலம் வந்தவர்.. அவ்வளவு ஏன், கிரானைட் சுரங்கம் மற்றும் அதன் நிர்வாகத்தில் ஆற்றிய பங்களிப்புக்காக 50-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசின் விருதையும் பெற்றுள்ளார்.
ஜெம் வீரமணி தந்த அதிர்ச்சி
ஜெம் வீரமணி மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் 2025-ம் ஆண்டு முதல் விசாரணையில் இருந்து வருகிறது. குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர், பென்டிரைவ் ஒன்றையும், கடிதம் ஒன்றையும் தந்தாராம்..
அந்த பென்டிரைவில் இருந்த வீடியோவில், ஜெம் வீரமணி ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இருந்துள்ளன.. இந்தச் சம்பவம் ஜெம் வீரமணியின் உதவியாளராகச் செயல்பட்ட சாந்தி என்பவர் வீட்டில் நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து இது தொடர்பான விசாரணையும் ஆரம்பமானது.. ஆனால், ஆரம்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், மீண்டும் விசாரணை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்பட்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன... ஒவ்வொரு ஆதாரமும் வெளிவர வெளிவர, ஜெம் வீரமணி விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை தந்துவிட்டது.
18 சிறுமிகள் பாதிப்பு
இந்த நிலையில், ஜெம் வீரமணி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் இதுவரை 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை இப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "சிறுமிகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஜெம் வீரமணி, மகேந்திர சிம்ஹன், சாந்தி, லாசர், கணேசன், சீனிவாசன், சக்திவேல், பாபு, பார்த்திபன், பெருமாள் என்கிற பாலா ஆகிய 10 பேர் மீது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIT) மூலம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் இதுவரை 18 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளது.
2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை
இதனிடையே, பதிவு செய்யப்பட்டுள்ள 9 வழக்குகளில் 2 வழக்குகளில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விபச்சாரத் தடுப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 11/2026 வழக்கில் கடந்த நவம்பர் 11-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது. மேலும், நவம்பர் 17-ம் தேதி குற்றப்பத்திரிகை நகல்கள் எதிரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதுபோலவே இன்னொரு வழக்கான விபச்சாரத் தடுப்புப் பிரிவு குற்ற எண் 12/2026-ல் கடந்த நவம்பர் 23-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளிலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பிரகாஷுக்கு வாரண்ட்
இந்த வழக்கில் பிரகாஷ் என்பவர் தலைமறைவாக உள்ளதால், அவரை கைது செய்வதற்காக கோர்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.. அத்துடன் அவரைக் கண்டுபிடிக்க புளூ கார்னர் நோட்டீஸ் (Blue Corner Notice) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்திலும் நீதிமன்றத்தில் விரைவாக விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல்துறையும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆக, இதுவரை 18 சிறுமிகள் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்... 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது... தலைமறைவாக உள்ள பிரகாஷைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வீரமணி வழக்கு உச்சக்கட்ட பரபரப்பை தந்துள்ளது..!!!


Click it and Unblock the Notifications
