வானம் ஒன்றும் இடிந்துவிடாது..ஏன் அவசரப்படுறீங்க? செந்தில் பாலாஜி கேசில்.. தமிழக அரசை விளாசிய நீதிபதி
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கின் விசாரணையில் தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப அரசுத் தரப்பின் அணுகுமுறை மாறுவதற்கு உச்ச நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு அரசாங்கம் வழக்கை இழுத்தடிக்கிறது, மற்றொரு அரசாங்கம் அவசர அவசரமாக நகர்த்துகிறது, என்று நீதிபதிகள் காட்டமாக விமர்சித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி என்ன?
கடந்த 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் பல குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டதை ஒன்றாக இணைத்து விசாரிப்பது மற்றும் கீழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சென்னை கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு நவம்பர் 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் விசாரணைக்கு வரவுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து முடிவெடுப்பதற்கு முன்பே, கீழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டும் அல்லது கீழமை நீதிமன்ற விசாரணைக்குத் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் ஷக்தர் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஹரிபிரியா பத்மநாபன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகுதான் இந்த வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ளது. தினசரி அடிப்படையில் விசாரணை நடந்து வருவதால், வழக்கை விரைந்து நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிபதிகளின் காட்டமான கருத்துகள்
அரசுத் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, ஆட்சி மாற்றத்தைக் காரணமாகக் கூறியதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார், ஆட்சி மாறியது குறித்தெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. குற்றவியல் நீதி நிர்வாகத்தில் உள்ள மிக மோசமான விஷயமே இதுதான்.. அரசியல் அதிகாரம் மாறும்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் போக்கும், வழக்கின் தன்மையும் மாறிவிடுகிறது. ஒரு அரசாங்கம் வழக்கை இழுத்தடிக்கிறது; இன்னொரு அரசாங்கம் மிக வேகமாகச் செயல்படுகிறது. வழக்கு விசாரணையில் கொஞ்சமாவது நிதானமும், நியாயமான அணுகுமுறையும் இருக்க வேண்டும். அரசுத் தரப்பு வழக்கறிஞர்களிடம் இருந்து பொறுப்பான செயல்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.. என்று நீதிபதி பாக்சி குறிப்பிட்டார்.
மேலும், இந்த வழக்குகள் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டவை. இப்போது நாம் 2026-ஆம் ஆண்டில் இருக்கிறோம். அடுத்த விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்துவிடாது. தினசரி விசாரணை நடப்பதாகக் கூறுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை.. என்றும் நீதிபதி சாடினார்.
தலைமை நீதிபதி சூர்யா காந்த் பேசுகையில், குற்றச்சாட்டுகள் தீவிரமானவையாக இருக்கலாம்.. அதற்காக ஒருவரது தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே அவரைக் குற்றவாளியாக முடிவு செய்துவிடக் கூடாது.. என்று அறிவுறுத்தினார்.
நீதிமன்ற உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மேல்முறையீட்டு மனு மீதான அடுத்த விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதுவரை சென்னை கீழமை நீதிமன்றத்தில் நவம்பர் 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த விசாரணையைத் தள்ளிவைக்குமாறும், வழக்கை டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கும் வாரத்திற்கு ஒத்திவைக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
