ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்.. ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் தாமதம் செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பதில் அளிக்க ஐபிஎஸ் அதிகாரி அருண் மற்றும் சென்னை செம்பியம் காவல் ஆய்வாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு விமர்சனங்களை எழுப்பியருந்தது.

கொலை சம்பவம் குறித்து, செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் குற்றவாளியான பிரபல தாதா நாகேந்திரன் மற்றும் பொன்னை பாலு உட்பட 28 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு.. தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வழக்கு தொடர்பான பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றன.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அப்போது சென்னை காவல் ஆணையராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி அருண் வழக்கின் ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைப்பதில் வேண்டுமென்றே தாமதம் செய்ததாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தாமதத்துக்கு செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் உடந்தையாக செயல்பட்டதாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின் முடிவில், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் படி ஐபிஎஸ் அதிகாரி அருண் மற்றும் செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே சமயம், நோட்டீஸ் அனுப்பி அதன் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தால் போதுமானது என்றும்.. இந்த விசாரணைக்காக இருவரும் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.


Click it and Unblock the Notifications
