செஞ்சி சிறுமி மாயம்.. அடுத்தடுத்து நடக்கும் மர்மம்.. ஹோமம் நடத்திய அதிகாரி தூக்கியடிக்கப்பட்டார்!
விழுப்புரம்: செஞ்சி சிறுமி வழக்கில் காவல் நிலையத்திற்குள்ளேயே சிறப்பு யாகம் மற்றும் கணபதி ஹோமம் நடத்திய காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு தற்போது அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் ஒரு மாதத்தைக் கடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் 8 கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சூழலில், வழக்கின் ஆரம்பத்தில் விசாரணை நடத்திய சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குள்ளேயே சிறப்பு யாகம் மற்றும் கணபதி ஹோமம் நடத்திய காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு, தற்போது அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்திற்குள் நடந்த கணபதி ஹோமம் - வைரலான வீடியோ
சிறுமி ஹேமலதா மாயமாகி 40 நாட்களைக் கடந்தும் எந்தத் துப்பும் துலங்காமல் உள்ள நிலையில், குழந்தை விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என வேண்டி சத்தியமங்கலம் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே சிறப்பு பூஜை மற்றும் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.
இந்த வழிபாட்டில் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு தனது மனைவியுடன் அமர்ந்து யாகம் வளர்த்தார். அவருடன் சத்தியமங்கலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த மற்ற காவலர்களும் சீருடையிலும் சாதாரண உடையிலும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். காவல் நிலையத்திற்குள் புரோகிதர்களை வைத்து யாகம் நடத்தப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவியது.
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனம்!
அரசு அலுவலகமான காவல் நிலையத்திற்குள் மத வழிபாடுகள் மற்றும் யாகம் நடத்தியதற்குச் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன.
ஒரு குழந்தையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறை, 40 நாட்களாகத் துப்பு துலக்க முடியாமல் இப்போது காவல் நிலையத்திற்குள்ளேயே ஹோமம் வளர்ப்பது காவல்துறையின் இயலாமையைக் காட்டுகிறது.. அரசு விதிகளை மீறி காவல் நிலைய வளாகத்திற்குள் யாகம் நடத்தியது தவறு என்றும் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.
டிஐஜி அருளரசு உத்தரவு: ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர்!
இந்த வீடியோ விவகாரம் காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அருளரசு உத்தரவின் பேரில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபுவை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவர் சத்தியமங்கலம் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தொடரும் பரபரப்பு!
ஏற்கனவே இந்த வழக்கின் முதல் 10 நாட்களில் சத்தியமங்கலம் போலீசார் தடயங்களைப் பாதுகாக்கத் தவறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இப்போது காவல் நிலையத்திற்குள் ஹோமம் நடத்திய விவகாரத்தில் ஆய்வாளர் சுரேஷ் பாபு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான மர்ம முடிச்சை உடைக்க, சிபிசிஐடி தனிப்படை அதிகாரிகள் 8 கோணங்களில் தங்களது விசாரணையைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
