சித்ரவதை செய்தே கொன்றனர்! ஸ்டேஷனில் இருந்த அத்தனை பேரையும் கைது பண்ணுங்க - செக்கானூரணி கேசில் கோர்ட்
மதுரை: மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை காவல்துறைக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் பாலகிருஷ்ணன் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுதான் உயிரிழந்திருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை; சம்பவத்தன்று காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை அனைவரும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே" என நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

வழக்கின் பின்னணி என்ன?
தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (42), கடந்த நவம்பர் 3-ஆம் தேதி ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கிச் சென்றபோது வலந்தூர் அருகே லாரி தீப்பிடித்தது. இதில் ரூ.2.56 கோடி மதிப்பிலான 67 ஏலக்காய் மூட்டைகள் மாயமானதாகக் கூறி சரக்கு நிறுவன மேலாளர் புகார் அளித்தார். இது தொடர்பாக செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற பாலகிருஷ்ணன், நவம்பர் 14-ஆம் தேதி அதிகாலை காவல் நிலையக் கழிப்பறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
போலீஸார் தரப்பில் இது தற்கொலை எனக் கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது முதுகில் 5 ரத்தக் காயங்களும், கழுத்தில் 3 ஊசி குத்திய தடயங்களும் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் நடந்த காரசார விவாதம்
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்த நீதிபதிகள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்:
சட்டப்படி காவல்துறையினர் எந்த விதிமுறையையும் பின்பற்றவில்லை. பாலகிருஷ்ணன் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுதான் இறந்திருக்கிறார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அவர் ஏதேனும் தவறு செய்திருந்தாலும், அதைக் காரணமாகக் கொண்டு காவல்துறையினர் அவரை அடித்துச் சித்ரவதை செய்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஒருவரை முறையாகக் கைது செய்யாத நிலையில், அவரை எப்படி இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தீர்கள்? அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், கழிப்பறையில் இருந்து உடலை மீட்கும்போது ஏன் புகைப்படம் எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் வினவினர்.
இந்த வழக்கில் வெறும் பணியிடை நீக்கம் மட்டும் போதாது. காவல் ஆய்வாளர்கள் முதல் அடிமட்ட காவலர்கள் வரை, சம்பவம் நடந்தபோது காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைவரும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே" என நீதிபதிகள் மிகக் கடுமையாகத் தெரிவித்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி சுதாவை இந்த வழக்கில் மனுதாரராகத் தாமாக முன்வந்து நீதிமன்றம் சேர்த்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி (CB-CID) காவல்துறையினர் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடி கருத்துகள் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications
