கோர்ட் தீர்ப்பைத்தான் மதிக்க மாட்டீங்களே! நூலக ஊழல் வழக்கில்! தவெக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு பொது நூலகங்களுக்குப் போலி மற்றும் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட தரமற்ற புத்தகங்களை வாங்கிய ஊழல் வழக்கில், தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் இருப்பதைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்; இது அப்பட்டமான அரசியலமைப்புத் தோல்வி.. என்று நீதிபதி வி. லட்சுமிநாராயணன் ஆவேசமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி என்ன?
கடந்த தீபாவளி சமயத்தில், கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குச் சென்ற பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன், அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
அதாவது, பொருளாதார அறிஞர் ஜீன் டிரேஸ் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் பெயர்களில் போலியாக உருவாக்கப்பட்ட புத்தகங்கள், இணையத்தில் இருந்து அப்படியே காப்பியடிக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் எழுதப்பட்ட அர்த்தமற்ற புத்தகங்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, பீனிக்ஸ் பதிப்பகம் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து ஒரு புத்தகம் சுமார் ரூ.1,645 என்ற அதிக விலைக்கு வாங்கப்பட்டதும், அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து மட்டும் சுமார் ரூ17 லட்சம் மதிப்பிலான 1,700 சர்ச்சைக்குரிய புத்தகங்கள் வாங்கப்பட்டதும் தெரியவந்தது.
ஏற்கெனவே 2024 ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த வெளிப்படையான ஆன்லைன் கொள்முதல் விதிகளை அதிகாரிகள் மீறியதால், மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. மேலும், சம்பந்தப்பட்ட பதிப்பகங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 22.2 லட்சம் முடக்கப்பட்டதுடன், மூன்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பி. சந்திரமோகன், எஸ். ஜெயந்தி மற்றும் எம். ஆர்த்தி ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் பதிப்பாளர் மோகன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
முன்னாள் எம்.எல்.ஏ-வும் திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான இ. பரந்தாமன் தொடர்ந்த இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிப் புத்தகங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். "இவை வெறும் குப்பைகள்.. உண்மைக்குப் புறம்பான தகவல்கள் கொண்டவை" என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகால புத்தகக் கொள்முதல் ஆவணங்களை ஆய்வு செய்யவும், தற்போது நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைக் கண்காணித்து அறிக்கை அளிக்கவும், முன்னாள் காவல்துறைத் தலைவரும், முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரும், சி.பி.ஐ-யின் முன்னாள் உயரதிகாரியுமான மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஜி. வெங்கட்ராமனை நீதிபதி நியமித்தார்.
ஆனால், இதற்கு அரசுத் தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரே இந்த விசாரணையைக் கண்காணித்து வருகிறார் என்று அவர் வாதிட்டார். இதனால் கோபமடைந்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் இருக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதைத்தானே இப்போது செய்து கொண்டிருக்கிறீர்கள்? இது அப்பட்டமான அரசியலமைப்புத் தோல்வி என்று கடுமையாகச் சாடினார்.
பின்னர், ஜி. வெங்கட்ராமனுக்கு தற்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இரண்டு வாரங்களுக்குள் முதல் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரமும் தொடர்பும்
நீதிபதியின் இந்தக் கடுமையான வார்த்தைகளுக்குப் பின்னால், அதற்கு முந்தைய நாள் நடந்த திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரமும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. நவம்பர் 24 அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நவம்பர் 20-ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது. ஆனால், தமிழக அரசுத் தரப்பு வழக்கமான உச்சிப் பிள்ளையார் மண்டபத்தில் மட்டும் தீபம் ஏற்றிவிட்டு, தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. தீபம் ஏற்றுவோம் என்று கூறிவிட்டு ஏற்றாமல் ஏமாற்றி உள்ளார்.
இதனால் நவம்பர் 25 காலை மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிகாரிகளைக் கடுமையாகக் கண்டித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரும் நிலை ஏற்பட்டது. ஒருபுறம் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தீபம் ஏற்ற மறுத்ததும், மறுபுறம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பு உத்தரவுக்கு அரசுத் தரப்பு முட்டுக்கட்டை போட்டதும் அடுத்தடுத்த நாட்களில் நடந்ததால், அரசின் செயல்பாட்டை அரசியலமைப்புத் தோல்வி" என்று நீதிபதி விமர்சித்தது சட்ட வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
