உ.பியில் ஆட்சியை பிடிக்கும் அகிலேஷ்? அடித்து மேலே வரும் யோகி! வெளியான லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பாக ஸ்கோர் இன்டெலிஜென்ஸ் என்ற அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இந்திய அரசியலில் எப்போதுமே அதிக கவனம் பெறும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் உள்ளது. வரும் 2027-ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஸ்கோர் இன்டெலிஜென்ஸ் என்ற அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Uttar Pradesh Uttar Pradesh Election 2027

கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 23-ம் தேதி வரை சுமார் 91,429 வாக்காளர்களிடம் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டசபைத் தொகுதிகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு எந்தவொரு கட்சியோ அல்லது கூட்டணியோ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 202 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பின்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.

கூட்டணி வாரியான இடங்கள் என்ன?

இந்த ஆய்வின்படி, பாஜக கூட்டணிக்கு 181 முதல் 226 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், சமாஜ்வாதி - காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணிக்கு 174 முதல் 219 இடங்கள் வரை கிடைக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கூட்டணிகளுமே ஆட்சி அமைக்கத் தேவையான 202 என்ற எண்ணிக்கையை நெருங்குவதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை இப்போதே கணிப்பது கடினமாக உள்ளது. குறிப்பாக, 42 தொகுதிகளில் பாஜக மற்றும் சமாஜ்வாதி இடையே மிகக் குறைந்த வாக்கு வித்தியாசமே இருப்பதால், அந்தத் தொகுதிகளே அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கட்சி வாரியான நிலவரம் மற்றும் வாக்கு சதவீதம்

கட்சிகள் தனித்தனியாகப் பெறும் இடங்களைப் பொறுத்தவரை, பாஜக 177 முதல் 215 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. சமாஜ்வாதி கட்சி 160 முதல் 202 இடங்களை வெல்லக்கூடும்.

பாஜக கூட்டணியில் உள்ள ஆர்எல்டி கட்சிக்கு 10 இடங்களும், அப்னா தளம் கட்சிக்கு 5 இடங்களும், சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு 3 முதல் 5 இடங்களும், நிஷாத் கட்சிக்கு 1 முதல் 3 இடங்களும் கிடைக்கலாம். மறுபுறம், காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடமும், ராஜா பையாவின் ஜனசத்தா தளம் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவுக்கு 36.69 சதவீத வாக்குகளும், சமாஜ்வாதி கட்சிக்கு 36.98 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது, சமாஜ்வாதி கட்சி பாஜகவை விட 0.29 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு சொல்கிறது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 11.45 சதவீதமும், காங்கிரஸ் கட்சிக்கு 7.67 சதவீதமும் வாக்குகள் கிடைக்கலாம்.

அடுத்த முதல்வர் யார்?

உத்தரப் பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு 35.29 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக அகிலேஷ் யாதவுக்கு 26.50 சதவீத மக்களும், மாயாவதிக்கு 8.59 சதவீத மக்களும் ஆதரவு அளித்துள்ளனர். சுமார் 22.66 சதவீத மக்கள் இன்னும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் குழப்பத்தில் உள்ளனர்.

மக்களின் மனநிலை என்ன?

யோகி ஆதித்யநாத் ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாகச் சட்டம் மற்றும் ஒழுங்கை 12.84 சதவீத மக்கள் பாராட்டியுள்ளனர். அதேநேரம், சாலைகளின் மோசமான நிலையை 16.69 சதவீத மக்கள் மிகப்பெரிய குறையாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஆண்கள் மத்தியில் பாஜக கூட்டணிக்கு அதிக ஆதரவும், பெண்கள் மத்தியில் சமாஜ்வாதி கட்சிக்கு அதிக ஆதரவும் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பின் அடுத்தகட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வரும் டிசம்பர் 25-ம் தேதி வெளியாக உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+