நடிகர் தர்ஷனை யாருன்னே தெரியாது! ரேணுகாசாமி கொலை வழக்கில் சாட்சிகள் அந்தர் பல்டி.. கேஸ் காலி
பெங்களூர்: நடிகர் தர்ஷனுக்கு எதிரான கொலை வழக்கில் முக்கியமான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி உள்ளனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா ஆகியோர் சிக்கியுள்ள ரேணுகாசாமி கொலை வழக்கு, தற்போது நீதிமன்ற விசாரணையில் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் காவல்துறைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், முக்கிய நேரில் கண்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் தங்களது முந்தைய வாக்குமூலத்தை மாற்றி, பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி, சித்ரதுர்காவைச் சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமி கடத்தப்பட்டு, பட்டணகெரே பகுதியில் உள்ள ஒரு வாகன நிறுத்தும் இடத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கின் சாட்சி விசாரணை பெங்களூர் அமர்வு நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தர்ஷன் வழக்கில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
இந்த நிலையில், கடந்த நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கில் முக்கிய சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த கிரண் என்பவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கொலை நடந்ததாகக் கூறப்படும் பட்டணகெரே ஷெட்டில் பணியாற்றி வந்த இவர், சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் காவல்துறையிடம் ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார். ஆனால், நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சாட்சியமளித்த கிரண், "நான் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஷெட்டில் வேலை செய்தேன். மதியம் 2 மணிக்கு சாப்பிடச் சென்றேன். அன்று அங்கு எந்த ஒரு அசாதாரண சம்பவமும் நடக்கவில்லை" என்று கூறி அதிர வைத்தார்.
அதுமட்டுமின்றி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நடிகர் தர்ஷன் மற்றும் பிற குற்றவாளிகளைக் காட்டி அடையாளம் காணும்படி கேட்டபோது, இவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது, இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கிரண் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். காவல்துறை தரப்பு வழக்கறிஞர் பி. பிரசன்ன குமார், நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்து முன்பு வாக்குமூலம் அளித்தது நினைவிருக்கிறதா? என்று கேட்டதற்கு, நீதிமன்றத்திற்கு வந்து சத்தியம் செய்தது நினைவிருக்கிறது, ஆனால் நான் என்ன சொன்னேன் என்பது இப்போது நினைவில் இல்லை என்று கிரண் பதிலளித்தார்.
தனக்கு எதுவும் தெரியாது - வாக்குமூலம்
இதே நாளில், அந்த ஷெட்டின் காவலாளியாகப் பணியாற்றிய நரேந்திர சிங் என்பவரும் சாட்சியமளிக்க ஆஜரானார். அவரும் சம்பவம் நடந்த நாளன்று ஷெட்டில் என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். நரேந்திர சிங்கிற்கு இந்தி மொழி மட்டுமே தெரியும் என்பதால், அவரிடம் முறையான குறுக்கு விசாரணை நடத்த இந்தி மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தேவை என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நரேந்திர சிங்கின் விசாரணையை வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கில் சாட்சிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அக்டோபர் மாதம் ஷெட் ஊழியர் புனீத் மற்றும் நடிகர் யஷஸ் சூர்யா உள்ளிட்டோரும் பிறழ் சாட்சிகளாக மாறியிருந்தனர். கிரணும் தனது வாக்குமூலத்தை மாற்றியதன் மூலம், இந்த வழக்கில் பிறழ் சாட்சிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
கொலை நடந்த இடத்திலேயே பணியாற்றிய ஊழியர்களும் காவலாளியும் தங்களுக்கு எதுவுமே தெரியாது எனக் கைவிரித்திருப்பது, அரசு தரப்புக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. நேரில் கண்ட சாட்சிகள் பின்வாங்குவதால், இனி சிசிடிவி காட்சிகள், செல்போன் டவர் லொகேஷன் மற்றும் தடயவியல் ஆதாரங்களை மட்டுமே நம்பி குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தனக்கு ஏற்பட்டுள்ள முதுகுவலிக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி தர்ஷன் மனு தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
