கைவிட்ட பருவமழை! சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு? நீர் ஆதாரங்களை தேடும் அரசு!
சென்னை: இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை என்பதால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் நீர் அளவு எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இதனால் அடுத்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனை சமாளிக்க தற்போது புதிய நீர் ஆதாரங்களை நீர் வளத்துறை தேடி வருகிறது. இப்போது நமக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் டிசம்பர் பருவமழை மட்டும்தான்.

ஏரிகளில் போதுமான அளவில் நீர் இல்லை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு 39.4 சதவீதமாக மட்டுமே உள்ளது. எனவே அடுத்த ஆண்டு கொடைக்காலத்தில் குடிநீர் கட்டுப்பாட்டை சமாளிக்க.. சென்னை குடிநீர் வாரியம் மாற்று நீர் ஆதாரங்களை அதிகரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பு நிலவரத்தைப் பொறுத்தவரை, வீராணம் ஏரி உட்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் மொத்த கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில் தற்போது 39.4% மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
நம்ப வைத்து ஏமாற்றிய பருவமழை
சென்னை உட்பட வட மாவட்டங்களில்.. கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 700 கன அடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு சுமார் 300 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரிக்கும் இதே போல ஓரளவுக்கு நீர்வரத்து உள்ளது. இருப்பினும் பிரச்சனை என்னவெனில்.. இப்படி கிடைக்கும் நீர் தினசரி குடிநீர் தேவைக்கு எடுக்கப்படும் அளவுக்கு சமமானதாக இருக்கிறது என்பதுதான். எனவே ஏரிகளின் நீர்மட்டம் அதிகரிக்காமல் அதே நிலையில் நீடிக்கிறது.
டிசம்பர் மழைதான் ஒரே நம்பிக்கை
அடுத்த ஆண்டு கோடை காலம் வரை நிலைமை இப்படியே இருந்தால்.. பிரச்சனை சீரியஸாக மாறும் என்று சென்னை குடிநீர் வாரியம் அச்சமடைந்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை முடிவடைய இன்னும் ஒரு மாதத்திற்கும் சற்று அதிகமான நாட்களே இருப்பதால்.. டிசம்பர் மாதத்தில் பெய்யப் போகும் மழை ஏரிகளை நிரப்பும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
குடிநீர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள்
குறைந்த அளவே நீர் இருந்தாலும்.. இப்போதைக்கு சென்னையில் குடிநீர் விநியோகத்தை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், பருவமழை முடிந்த பிறகு நீர் இருப்பை பொறுத்து இது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நீர் வளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
மாற்று ஏற்பாடுகள்
அடுத்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், அதனை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி சிக்கராயபுரம் மற்றும் எருமையூர் ஆகிய இடங்களில் உள்ள கைவிடப்பட்ட கல் குவாரிகளில் இருந்து ஏற்கனவே குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. மேலும், புதிய கல்குவாரிகளை தேடும் பணி நடந்து வருகிறது. மட்டுமல்லாது பெருங்குடி 3ம் நிலை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீர்.. பெருங்குடி ஏரியில் விடப்பட்டு, அங்கிருந்து சிறிய அளவில் நீர் எடுக்க தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் திட்டங்கள்
மேலும் அயன்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து நீர் எடுக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இங்கு இருந்து எடுக்கப்படும் நீர் முறையே முகப்பேர் மற்றும் பெரும்பாக்கம் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்டு.. குடிநீர் விநியோகித்துடன் இணைக்கப்படும். பருவ மழை முடிந்தவுடன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த திட்டங்கள் செயல்பாட்டுகள் வரும் என்று அதிகாரிகள் கூறியிருப்பதாக 'தி இந்து' ஆங்கில நாளிதழில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மொத்தத்தில்..
1. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான நீர் இல்லை
2. போதுமான நீர் இல்லாததால் குடிநீர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்
3. மழை காரணமாக ஏரிகளுக்கு வரும் நீர், குறைந்த அளவே இருப்பதால் தினசரி பயன்பாட்டுக்கே போதுமானதாக இருக்கிறது.
4. ஏரிகளில் நீர் இல்லாததால், புதியதாக கல்குவாரிகளை அரசு தேடி வருகிறது
வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு 70-80% வரை இருக்கும். ஆனால், இந்த முறை வெறும் 39.4% மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
