இந்தியா, சீனாவுக்கு வரி.. ஆனால் பாகிஸ்தானுக்கு மட்டும் வரி இல்லை.. டிரம்ப் போடும் கணக்கு இதுதான்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் டிரம்ப் அரசின் நேற்றைய தினம் பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதிக்க பரிந்துரை அளித்திருந்தது. அதில் இந்தியாவுக்கு 25% வரை வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சீனா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கூட இந்த பட்டியலில் இருந்தாலும் பாகிஸ்தான் மட்டும் இதில் இருந்து மிஸ்ஸாகி இருந்தது. மற்ற நாடுகளுக்கு வரி போடும் அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு மட்டும் வரி விதிக்காமல் இருப்பது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தது முதலே அவர் இஷ்டத்திற்கு வரிகளை அள்ளி வீசி வருகிறார். ஒவ்வொரு உலக நாடு மீதும் அவர் வரிகளை அறிவித்து வருகிறார். இதன் காரணமாகவே சர்வதேச வர்த்தகம் மிக மோசமாக பாதித்துள்ளது. இது பல்வேறு நாடுகளையும் பாதித்து வருகிறது.

புதிய வரி
இந்த சூழலில் தான் பல்வேறு உலக நாடுகள் மீது புதிய வரி விதிக்க அமெரிக்கா நேற்று பரிந்துரைத்தது. உலக சந்தையில் தேவையைவிட அதிகமாக பொருட்களை உற்பத்தி செய்து குவிப்பதாகக் குற்றம்சாட்டி, இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட 14 நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சர்வதேச உற்பத்தி திறன் மற்றும் ஏற்றுமதி தொடர்பான கொள்கைகள் குறித்த வர்த்தக விசாரணையின் அடிப்படையில் அமெரிக்கா இந்த முடிவுகளை எடுத்திருந்தது.
அரசின் மானிய உதவிகளுடன் அளவுக்கு அதிகமாக பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதால், சர்வதேச சந்தையில் விலை குறைவதாகவும் இதனால் அமெரிக்க உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக டிரம்ப் அரசு குற்றம்சாட்டுகிறது. அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த நாடுகளால் தான் சர்வதேச மார்கெட்டில் பல பொருட்கள் விலை குறைவாக இருக்கிறதாம். இப்படி விலை குறைவாக இருப்பது அமெரிக்காவை பாதிப்பதாக சொல்லியே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு வரி இல்லை
இதில் பல்வேறு நாடுகள் தொடர்பாக டிரம்ப் அரசு விசாரணை நடத்தியது. அதன்படி பாகிஸ்தான் மீதும் அமெரிக்கா விசாரணை நடத்தியது. இருப்பினும், புதிய வரி விதிக்க முன்மொழியப்பட்ட 14 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறவில்லை. இதற்கு பாகிஸ்தானின் ஏற்றுமதி கட்டமைப்பும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஜவுளி மற்றும் ஆடை பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால், அமெரிக்கா இப்போது ஸ்டீல், அலுமினியம், வாகனங்கள், இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள் ஆகிய துறைகள் குறித்து மட்டுமே விசாரணை நடத்தியிருந்தது. இந்த துறைகளில் சீனா உள்ளிட்ட நாடுகளின் உற்பத்தி தான் அமெரிக்க நிறுவனங்களைப் பாதிப்பதாக அமெரிக்கா கருதுகிறது. இந்த குறிப்பிட்ட துறைகளில் பாகிஸ்தானுக்கு பெரிய பங்கு இல்லை என்று டிரம்ப் அரசு கருதுவதாலேயே அவர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை.
அதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்க வரிகள் முற்றிலும் இல்லை என்று அர்த்தமல்ல. டிரம்ப் அரசு வந்த பிறகு பல உலக நாடுகளுக்கு வரிகள் விதிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் அரசும் அதில் தப்பவில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
இந்தியா
இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க USTR எனப்படும் அமெரிக்க வர்த்தக அலுவலகம் முன்மொழிந்துள்ளது. இதில் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம். இந்தியா அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டினால், இந்த வரி 17 சதவீதமாக குறைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து என்ன
சீனாவுக்கு 20 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சில பொருட்களுக்கான மொத்த வரி 40 சதவீதம் வரை செல்லலாம். வங்கதேசம், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் புதிய வரிகள் முன்மொழியப்பட்டுள்ளன. அதேநேரம் இது பரிந்துரையாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் நிறுவனங்கள் அடுத்த சில வாரங்களுக்கு கருத்து தெரிவிக்கலாம். அதன் பிறகே அமெரிக்கா இறுதி முடிவை எடுக்கும்.


Click it and Unblock the Notifications
