மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாடு செல்லக்கூடாது.. திடீரென மோடி போட்ட உத்தரவு.. பின்னணி
டெல்லி: மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம். வெளிநாடு போகும் பிளான் இருந்தால் அதனை தள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திடீரென்று அறிவுரை வழங்கி உள்ளார். நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திடீரென்று பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதன் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் கேபினட் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பல்வேறு அறிவுரைகளை மத்திய அமைச்சர்களுக்கு வழங்கினார்.

அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ''மத்திய அமைச்சர்கள் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம். வெளிநாடு செல்லும் பிளான் இருந்தால் அதனை ஒத்திவைக்க வேண்டும். தங்களின் துறை சார்ந்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். இதற்கு இப்போதே ஒவ்வொருவரும் தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும்'' என பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்த அறிவுரையின் பின்னணி என்னவென்றால் விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 103 நாட்கள் ஆகியும் மீண்டும் இரு அவைகளும் செயல்படவில்லை. குளிர்கால கூட்டத்தொடரை கூட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனால் மத்திய அரசு குளிர்கால கூட்டத்தொடரை கூட்ட தயாராகி வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும் என்பதால் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதோடு மத்திய அரசு தொகுதி மறுவரை மசோதா, பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்டவற்றை கொண்டு வர தயாராகி வருகிறது. இந்த 2 மசோதாக்களுக்காக தனியாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.
இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் கொண்டு வர வாய்ப்புள்ளது. இந்த சமயங்களில் மத்திய அமைச்சர்கள் இருப்பது அவசியம் என்பதால் பிரதமர் மோடி இந்த அறிவுரையை வழங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications
