தவறு செய்கிறீர்கள்.. தவெக அரசு சரியில்லை.. ஆட்சியைக் கலைக்க டெல்லிக்கு போன பாஜக ரிப்போர்ட்?
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாத விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் இந்தச் செயல்பாட்டால், பாரதிய ஜனதா கட்சி கடும் கொந்தளிப்பில் உள்ளது.
வழக்கமாக அமைதியாகவும், நிதானமாகவும் செயல்படும் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அனல் பறக்கும் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி.எல். சந்தோஷின் நேரடி எச்சரிக்கை
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, தனது சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் தளத்தில் பி.எல். சந்தோஷ் ஒரு காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். தவெக அரசையும், தமிழக சட்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரையும் நேரடியாகக் குறிப்பிட்டுள்ள அவர், நீங்கள் மிகப்பெரிய தவறு செய்கிறீர்கள் என எச்சரித்துள்ளார்.
மேலும், பல மாநாடுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஒரு வரலாற்றுத் தவறைச் சரிசெய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதனைத் தவறவிட்டுவிட்டீர்கள் என்றும், 1981-ம் ஆண்டு தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட புத்தகத்திலேயே அது தீபத்தூண் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் பி.எல். சந்தோஷ் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சியைக் கலைக்கக் கோரி டெல்லிக்குச் சென்ற அறிக்கை?
இதற்கிடையில், பாஜக அமைப்புச் செயலாளர் கே.டி. ராகவன் ஒரு படி மேலே சென்று, தவெக அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டெல்லி மேலிடத்திற்கு விரிவான அறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியப் புகார்கள்:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், உயர் நீதிமன்றத்தில் உத்தரவைச் செயல்படுத்துவோம் எனப் பொய் சொல்லி தவெக அரசு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியுள்ளது.
நீதிமன்றத்திற்கு வாக்குறுதி அளித்துவிட்டு, இறுதியில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு நேரடியாக அவமதித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காகக் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் தவெக அரசு பறித்துவிட்டது.
அடுத்தடுத்து அதிகரிக்கும் நெருக்கடி
ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 167(b)-ன் கீழ் முதலமைச்சர் விஜய்யிடம் விளக்கம் கேட்டுள்ளார். தற்போது பாஜக மேலிடமும் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையில் எடுத்திருப்பதால், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குச் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருக்கடிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன.


Click it and Unblock the Notifications
