திருப்பரங்குன்றம் தீபம்.. மதுரை கலெக்டர், தமிழக அரசு செய்தது சரியா.. ஓய்வு பெற்ற நீதிபதி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றத்தில் வழக்கமான ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். தீபத்தூண் என்று அழைக்கப்படும் இடத்தில் இந்த ஆண்டும் ஏற்றப்படவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், திருப்பரங்குன்றத்தில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படவில்லை. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. கண்ணன் விமர்சனம் செய்து கட்டுரை எழுதி உள்ளார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. கண்ணன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் கூறுகையில், "திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. நிர்வாக அல்லது நிறுவன ரீதியான விருப்பங்களைக் காரணம் காட்டி, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் தங்களுக்குச் சாதகமான வகையில் மட்டும் செயல்படுத்த முடியுமா?

Thiruparankundram Deepam

மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழி, உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, கோயில் அறங்காவலர் குழுவின் தீர்மானம் ஆகிய மூன்றையும் ஒன்றாக வைத்துப் பரிசீலிக்க வேண்டும். பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மதிக்க வேண்டுமா என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. அந்த வழக்கம் நிச்சயமாக மதிக்கப்பட வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக அனுமதித்திருந்த மற்றொரு ஏற்பாட்டைத் தடுக்க அந்தப் பாரம்பரிய நடைமுறையைப் பயன்படுத்த முடியுமா என்பதுதான் கேள்வி.


மதுரை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பல்வேறு ரிட் மனுக்கள் மீதான விசாரணையின்போது மதுரை மாவட்ட கலெக்டர் ஆஜரானார். அவர் ஒரு தனிநபராக மதம் சார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக, மாவட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த வேண்டிய மாநில அரசின் பிரதிநிதியாகவும் ஆஜரானார்.

அவர் அளித்த உறுதிமொழி நிர்வாக ரீதியான பொறுப்பைக் கொண்டது. எனவே, அவரது அடுத்தடுத்த செயல்பாடுகள் உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி ஆகிய இரண்டின் அடிப்படையிலும் மதிப்பிடப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு நிலுவையில் இருப்பதை மட்டும் காரணமாகக் காட்டி, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாமல் இருக்க முடியாது என்பதை முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி மதுரை உயர் நீதிமன்ற அமர்வு தெளிவுபடுத்தியது.

அறங்காவலர் குழு என்ன தீர்மானம் எடுத்தது?

மாலை 4 மணிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, மாலை 6 மணிக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரமும் கடந்துவிட்டது. மாவட்ட ஆட்சியர் நள்ளிரவில் தாக்கல் செய்த முதற்கட்ட நிலை அறிக்கையில், பார்வையாளர்கள், நிர்வாக நடுவர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழுவினர், வீடியோ ஒளிப்பதிவாளர், புகைப்படக் கலைஞர் உள்ளிட்ட அனைவரையும் தயார் நிலையில் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியர் விளக்கம்

மேலும், காவல் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் வருகையைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், தேவஸ்தானத்தின் சார்பில் தீபம் ஏற்றுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் பட்டியல் தனக்குக் கிடைக்கவில்லை என்றும், மாலை 7.32 மணிக்குத்தான் கோயில் செயல் அலுவலர் (EO) அறிக்கை அளித்ததாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அந்த அறங்காவலர் குழு, வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்மானித்ததாகவும், மாலை 6 மணிக்கு அங்கேயே தீபம் ஏற்றப்பட்டதாகவும் செயல் அலுவலர் தெரிவித்ததாக ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார். தேவஸ்தானம் அனுமதி அளிக்காத நிலையில், வேறு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அவசியமே இல்லை

தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் யாரும் இல்லாததே மாவட்ட ஆட்சியரின் கையறுநிலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், வேறு இடத்திலும் தீபம் ஏற்றலாமா என்பதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு மாவட்ட ஆட்சியருக்கோ, இந்து சமய அறநிலையத் துறைக்கோ அல்லது தேவஸ்தானத்துக்கோ வழங்கப்படவில்லை. அதேபோல், கூடுதலாக தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த நீதிமன்ற உத்தரவைப் புறக்கணிக்க அனுமதி வழங்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை.

கூடுதல் வழிபாடு

மத வழக்கங்களைப் பாதுகாக்க அறங்காவலர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் உத்தரவைத் தங்களது தீர்மானத்தின் மூலம் அவர்களால் மீற முடியாது. ஒரு பாரம்பரிய வழக்கத்தைப் பாதுகாப்பதும், கூடுதலாக நடைபெற வேண்டிய ஒரு வழிபாட்டைத் தடுப்பதும் இரு வேறு விஷயங்கள். உச்ச நீதிமன்றம் இரண்டுக்கும் இடையே வேறுபாட்டைக் காட்டியது.

உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன

2026 நவம்பர் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, நவம்பர் 24ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை மட்டுமே பொருந்தக்கூடிய இடைக்கால ஏற்பாடாக அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரத்தில், அந்த இடத்தில் பாரம்பரிய, மத அல்லது உரிமை சார்ந்த எந்தவொரு நிரந்தர உரிமையும் அங்கீகரிக்கப்படவில்லை. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

வழக்கமாக தீபம்

குறிப்பாக, உத்தரவின் 14(vi) பிரிவு முக்கியமானது. அதில், "வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடங்களில் தற்போது நடைமுறையில் உள்ள மத வழிபாடுகள் எந்தவித இடையூறுமின்றித் தொடர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அறங்காவலர் குழு தனது தீர்மானத்தை எடுக்க இந்தப் பிரிவு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், நீதிமன்றம் தனியாக அனுமதித்த மற்றொரு ஏற்பாட்டைச் செயல்படுத்தத் தவறியதற்கு இது விளக்கமாக இருக்க முடியாது.

தனியாக அனுமதி

பாரம்பரிய வழிபாடுகள் தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு அளித்த அதே நேரத்தில், தீபத்தூணிலும் தீபம் ஏற்றுவதற்குத் தனியாக அனுமதி அளித்தது. இதில் ஒன்றை மற்றொன்று நீக்கவில்லை. உச்சிப் பிள்ளையார் அருகே வழக்கமாக ஏற்றப்படும் தீபத்தை அணைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறவில்லை. அதேபோல், அந்த இடத்தில் தீபம் ஏற்றுவதை, கூடுதலாகத் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான மாற்றாகவும் கருத முடியாது.

காரணம் காட்டவே முடியாது

உத்தரவின் 13வது பத்தி, தீபம் ஏற்றுவதற்கான இடமாகக் கல் தூணைக் குறிப்பிடுகிறது. 14வது பத்தி அதற்கான ஏற்பாடுகளை விளக்குகிறது. குறிப்பாக, 14(ii) பிரிவின்படி, ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைப் பணிகளுக்கான பொறுப்பு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு வழிபாட்டு முறைகளும் இணைந்து நடைபெற வேண்டும் என்பதையே இந்த உத்தரவு எதிர்பார்த்தது. இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறவில்லை.
அறங்காவலர் குழுவின் தீர்மானத்தை மாவட்ட ஆட்சியர் காரணமாகக் காட்ட முடியாது.

அறங்காவலர்கள் தீர்மானம்

அனைத்து அறங்காவலர்களும் ஒருமனதாகத் தீர்மானம் எடுத்திருந்தாலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செல்லாததாக்க அவர்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடாது. அதேபோல், தனது பொறுப்பை அறங்காவலர்கள் மீது மாவட்ட ஆட்சியர் சுமத்திவிடவும் முடியாது. ஒருங்கிணைப்புப் பொறுப்பு கொண்ட அதிகாரி என்ற முறையில், கோயில் செயல் அலுவலர், இந்தியத் தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையர் ஆகியோருடன் ஆலோசித்து, தீபம் ஏற்றுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட குழுவை மாவட்ட ஆட்சியர் இறுதி செய்திருக்க வேண்டும்.

மத விருப்பம் கிடையாது

அறங்காவலர்களுக்கு எந்தவிதமான மேலாதிக்க அதிகாரமும் வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியருக்கு தனிப்பட்ட மத அல்லது சொத்துரிமை சார்ந்த விருப்பம் எதுவும் கிடையாது. அரசு சார்பில் பொது கடமையை நிறைவேற்றுபவராகவே அவர் செயல்படுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தின் 144வது பிரிவின்படி, அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்துக்கு உதவியாகச் செயல்பட வேண்டும்.

நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்திருந்தால், மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்திடம் கூடுதல் வழிகாட்டுதல்களைக் கேட்டிருக்க வேண்டும். மாறாக, நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் தனக்கு இருப்பதைப் போல அவர் செயல்பட்டிருக்கக் கூடாது.

மாநில அரசு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டுள்ளதா?

நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வுகள், சிவில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான தீவிரமான கேள்வியை எழுப்புகின்றன. தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை மேற்பார்வையிடும் பொறுப்பு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய கடமையை மதுரை உயர் நீதிமன்றமும் மீண்டும் வலியுறுத்தியது. ஆனால், வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், தீபத்தூண் மட்டும் இருளிலேயே இருந்தது.

நீதிமன்றம் ஆய்வு

1971ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் 2(b) பிரிவின்படி, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறுவது சிவில் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுகிறது.
அதிகாரிகள் வேண்டுமென்றே உத்தரவை மீறினார்களா என்பதை நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு அதிகாரிகளின் விளக்கங்கள், அறங்காவலர் குழுவின் தீர்மானம், செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஆகியவற்றை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.

விளக்கம் போதுமானது அல்ல

கார்த்திகை தீபத் திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், மாவட்ட ஆட்சியர் இணக்க அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட முதற்கட்ட அறிக்கையே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இறுதி அறிக்கைக்கு முன்னோட்டமாக இருந்தால், அது போதுமான விளக்கமாக இருக்காது.

கைகட்டி நிற்க முடியாது

தேவஸ்தானம் குறிப்பிட்ட நபர்களுக்கு தீபம் ஏற்றுவதற்கான அனுமதியை வழங்கவில்லை என்றால், திருவண்ணாமலையைச் சேர்ந்த மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கு இருந்தனர். பக்தர்களுக்கும் பற்றாக்குறை இல்லை. அதற்குத் தேவையான துணைக் குழுவினர் அனைவரும் தயாராக இருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயலிழக்கச் செய்ய அறங்காவலர்களுக்கு அதிகாரம் இல்லை. அதேபோல், மாவட்ட கலெக்டரும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கையைக் கட்டிக்கொண்டு நின்றிருக்க முடியாது.

மாநில அரசு பதிலளிக்க வேண்டிய கேள்வி

ஒரு இடத்தில் தீபம் ஏற்றப்பட்டுவிட்டது என்று கூறி மாநில அரசு இந்தப் பிரச்சினைக்குப் பதிலளிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதா என்பதுதான் கேள்வி. பாரம்பரியம், சட்டம்-ஒழுங்கு தொடர்பான கவலைகள், நிலுவையில் உள்ள மறுஆய்வு மனு ஆகிய எதுவும் அமலில் இருக்கும் நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான உரிமையை வழங்காது.

மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் உடன்பாடு இல்லையென்றால், அதற்கான தீர்வை நீதிமன்றத்தை அணுகித்தான் பெற்றிருக்க வேண்டும். தங்களது விருப்பத்துக்கு ஏற்ப மாற்று ஏற்பாட்டைச் செய்திருக்கக் கூடாது. ஒரு இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடம் இருளிலேயே இருந்தது. இதுதான் மாநில அரசு பதிலளிக்க வேண்டிய அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த கேள்வி" இவ்வாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. கண்ணன் தனது ஆங்கில கட்டுரையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+