சென்னை துறைமுகத்திற்கு ரூ.4,288 கோடி முதலீடு.. 20 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் புதிய முனையம்
சென்னை: எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடி முதலீட்டில் இரண்டாவது கண்டெய்னர் முனையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது சென்னையின் துறைமுகத்தின் திறனை அதிகரிக்க நிச்சயம் உதவும். அதேபோல அசாமில் புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக இருப்பது சென்னை துறைமுகம். வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள இது, இந்தியாவின் பழமையான செயற்கை துறைமுகங்களில் ஒன்றாகும். ஆட்டோமொபைல்கள், கண்டெய்னர், பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு சென்னை துறைமுகம் மிக முக்கியமாக இருக்கிறது.

முக்கிய முடிவுகள்
இந்த சூழலில் தான் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடி முதலீட்டில் இரண்டாவது கண்டெய்னர் முனையம் அமைக்க தரப்பட்டுள்ளது. அதேபோல அசாம் மாநிலம் சில்சாரில் ரூ.2,014 கோடி மதிப்பில் புதிய விமான நிலையம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்கள் உட்பட ஐந்து முக்கிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம்
சென்னை- எண்ணூர் தொழில் மண்டலத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காமராஜர் துறைமுகத்தின் சரக்குகளை கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய முனையம் அமைக்கப்பட உள்ளது. PPP எனப்படும் தனியார் பங்களிப்புடன் இந்த பணி மேற்கொள்ளப்படும். அதாவது இந்த முனையத்தை டிசைன் செய்வது, கட்டுமான பணிகளை மேற்கொள்வது, நிதி திரட்டுவது மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு அதை ஆபரேட் செய்வது உள்ளிட்டவற்றை தனியார் மேற்கொள்ளும் நிலையில், பிறகு அது அரசிடம் ஒப்படைக்கப்படும். இதை DBFOT என்று அழைக்கிறார்கள்.
900 மீட்டர் நீளத்தில் அமையவுள்ள இந்த முனையத்தால் ஆண்டுக்கு 20 லட்சம் TEU அளவிலான கண்டெய்னர்களை கையாள முடியும். இந்த பணி இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில் 11 லட்சம் TEU கையாளும் திறன் உருவாக்கப்படும். ஒப்பந்தம் வழங்கப்பட்ட 24 மாதங்களுக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும். இரண்டாவது கட்டத்தில் மேலும் 9 லட்சம் TEU திறன் சேர்க்கப்படும். இது 48 மாதங்களுக்குள் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.
40 ஆண்டுகள்
இந்த திட்டத்துக்கான ஒப்பந்த காலம் 40 ஆண்டுகள். இதில் கட்டுமானப் பணிகளுக்கான 48 மாதங்களும் அடங்கும். அதாவது இந்த முனையத்தை கட்டும் தனியார் நிறுவனம், அடுத்த 40 ஆண்டுகளு அதை ஆபரேட் செய்து கொள்ளலாம். அதில் இருந்து வரும் பணத்தை வைத்து கட்டுமான பணிகளுக்கு செலவிட்ட தொகையை மீட்டுவிடும். அதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து அது அரசின் வசமே வந்துவிடும்.. 24,346 TEU கொள்ளளவு மற்றும் 400 மீட்டர் நீளம் கொண்ட மிக பெரிய சரக்கு கப்பல்களையும் கையாளும் வகையில் புதிய முனையம் வடிவமைக்கப்பட உள்ளது.
தற்போது காமராஜர் துறைமுகத்தின் கண்டெய்னர் முனையம் ஆண்டுக்கு 8 லட்சம் TEU சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டது. 2025-26 நிதியாண்டில் சுமார் 7 லட்சம் TEU சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. அதாவது துறைமுகத்தின் மொத்த திறனில் சுமார் 88 சதவீதம் ஏற்கெனவே பயன்படுத்தப்படுகிறது. விரைவில் அது 100%ஐ எட்டிவிடும் என்பதாலேயே உடனடியாக புதிய முனையம் அமைக்கப்படுகிறது.
அசாம் விமான நிலையம்
அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் உள்ள டூலூ பகுதியில் ரூ.2,014 கோடி செலவில் புதிய விமான நிலையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கிரீன்ஃபீல்டு விமான நிலையத்தில் 12,351 சதுர மீட்டர் பரப்பளவில் பயணிகள் முனையம் அமைக்கப்படும். ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 800 பயணிகளை கையாளும் வசதி இதில் இருக்கும். ஏ-320 ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில் ஓடுபாதை அமைக்கப்படுவதுடன், ஒரே நேரத்தில் ஆறு விமானங்களை நிறுத்தும் வசதியும் இதில் இருக்கும். இது அந்த பகுதிகளின் வர்த்தகம், சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும்.
அதேபோல நாடு முழுவதும் தபால் சேவைகளை நவீனமயமாக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,141 கோடி செலவிடவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கிராமப்புறங்களிலும் தபால் சேவைகள் எளிதாக கிடைக்கவும், கடிதங்கள் மற்றும் பார்சல்கள் விரைவாக சென்றடையவும் இந்த திட்டம் உதவும்.


Click it and Unblock the Notifications
