"எனக்கு 75 - உனக்கு 63".. குகை வாழ் முதியவருடன் காதலில் விழுந்த பெண்! முதியோர் இல்லத்தில் திருமணம்
சிம்லா: அவருக்கு வயது 75. நம்பிக்கை துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர். மனைவி இறந்த பிறகு சொத்துகளை வாங்கி கொண்டு தவிக்க விட்ட சகோதரர்கள். வீட்டை விட்டு அனுப்பியதால் குகையில் வாழ்ந்தவர். அதேபோல் அந்த பெண்ணுக்கு வயது 63. கொல்கத்தாவில் இருந்து வழிதவறி வந்து தவித்தவர். குடும்பத்தினர் யாருமின்றி தவித்த இவர்கள் 2 பேரையும் மீட்டு மறுவாழ்வு கொடுத்தது முதியோர் இல்லம் தான். அந்த முதியோர் இல்லத்திலேயே இருவருக்கும் காதல் மலர தற்போது கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் பிலாஸ்பூர் மாவட்டம் காகஸ் என்ற இடத்தில் 'அப்னா கர்' என்ற பெயரில் முதியோர் இல்லம் அமைந்துள்ளது. இதனை வழக்கறிஞர் பிரகாஷ் சந்த் பன்சால் நடத்தி வருகிறார்.
இந்த முதியோர் இல்லத்தில் 75 வயது நிரம்பிய கங்கையா லால் என்ற முதியவர் இருக்கிறார். அதேபோல் சபினா என்ற 63 பெண்ணும் வசிக்கிறார். ஒரே முதியோர் இல்லம் என்பதால் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அடிக்கடி பார்ப்பது, பேசுவது என்று இருவருக்கும் இடையேயான பழக்கம் அதிகரித்தது. நல்ல நண்பர்கள் ஆனார்கள்.
இந்த நட்பு அடுத்தக்கட்டமாக காதலாக மாறியது. குடும்பத்தினரின் பாசம் கிடைக்காமல் முதியோர் இல்லத்தில் தவிக்கும் நாம் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது? என்ற கேள்வி இருவரின் மனதிலும் எழுந்தது. இதுபற்றி முதியோர் இல்ல நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 75 வயது நிரம்பிய கங்கையா லால், 63 வயது நிரம்பிய சபினா ஆகியோரின் திருமணம் கோலாகலமாக முதியோர் இல்லத்தில் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் திருமண சடங்குகள் நடந்தன. இதில் திருமண ஜோடி இருவரும் மஞ்சள் நிற உடை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.
பிறகு திருமணம் இந்து முறைப்படி நடந்து முடிந்தது. இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு அக்னியை 7 முறை சுற்றி வந்தனர். இந்த திருமணத்தில் முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், பிலாஸ்பூர் கலெக்டர் கிரண் பாதனா உள்ளிட்டவர்கள் பங்கேற்று திருமண ஜோடியை வாழ்த்தினர்.
இதுபற்றி கலெக்டர் கிரண் பாதனா கூறுகையில்,''இந்த ஜோடியின் திருமணம் சமூகத்திற்கு பாசிட்டிவ்வான தகவலை வழங்கி உள்ளது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வயதை தாண்டி அவர்களின் உரிமையின்படியும், விருப்பத்தின் படியும் வாழ அனுமதி உண்டு. இந்த திருமணத்தை நடத்தி வைத்த 'அப்னா கர்' முதியோர் இல்லத்துக்கு வாழ்த்துகள்'' என்று கூறினார்.
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது. வயதான காலத்தில் இருவரும் திருமணம் செய்து ''உனக்கு நான்.. எனக்கு நீ'' என வாழ்க்கையை தொடங்கியதை பலரும் பாராட்டி வருவதோடு, வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி முதியோர் இல்ல நிறுவனர் பிரகாஷ் சந்த் பன்சால் கூறுகையில், ''திருமணம் செய்த கங்கையா லாலுக்கு 75 வயது ஆகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தின் மாண்டி மாவட்டத்தில் உள்ள துனாக் கிராமத்தை சேர்ந்தவர். அவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். மனைவி இறந்த பிறகு எல்லாம் மாறியது. அவர் தனது சொத்துகள் அனைத்தையும் சகோதரர்களுக்கு எழுதி வைத்தார். அதன்பிறகு சகோதரர்கள் அவரை கைவிட்டனர். இதனால் அவர் கடந்த 2022ம் ஆண்டில குகையில் வாழ்ந்தார். அப்போது தான் அவரை மீட்டு வந்தோம்.
அதேபோல் சபினா கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் வழித்தவறி ஹிமாச்சல் பிரதேசத்துக்கு வந்தார். இங்கு அவர் தவித்து வந்தார். அவரை குடும்பத்தினர் யாரும் தேடிவரவில்லை. கடந்த 2025ம் ஆண்டில் எங்களின் முதியோர் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டார். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தால் அவர்கள் திருமணம் செய்து கொண்டு கடைசி காலத்தில் ஒன்றாக வாழ விரும்பினர். அதனை நிறைவேற்றி உள்ளோம்'' என்றார்.


Click it and Unblock the Notifications
