விஜய்யின் புதிய பங்களாவில் பரபரப்பு.. கண்ணாடி மோதி புஸ்சி ஆனந்துக்கு காயம்.. அபசகுனாமா என ஆய்வு!
சென்னை: முதல்வர் விஜய் புதிதாகக் குடியேறியுள்ள 'பாமினி இல்லம்' அரசு பங்களாவில், அமைச்சர் புஸ்சி ஆனந்த் கண்ணாடி கதவில் மோதி காயமடைந்த சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் முதலமைச்சர் விஜய்க்காக சமீபத்தில் உருவாக்கப்பட்ட அரசு பங்களாவான பாமினி இல்லத்தில் தான் தற்போதெல்லாம் ஓய்வு எடுக்கிறார் விஜய். இந்த இல்லத்தில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பால் காய்ச்சிக் குடியேறிருந்தார். இந்த பங்களாவில் முதல் நிகழ்ச்சியாக, தவெக கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை அழைத்து விருந்து வைத்தார் விஜய். வெறும் விருந்து நிகழ்வுகளுடன் முடியாமல், கூட்டணிக் கட்சிகளுடான ஆலோசனைக் கூட்டமாக மாறியிருந்தது அந்த சந்திப்பு. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

சற்று ஓய்வெடுத்திருந்தார் முதல்வர்
கூட்டம் முடிந்ததும் அவர்களையெல்லாம் வழியனுப்பி வைத்து விட்டு, சற்று ஓய்வெடுத்திருந்தார் முதல்வர் விஜய். ஒரு மணி நேரத்திற்கு பிறகு, திடீரென கிளம்பினார் விஜய். அந்த பங்களாவில் இருந்த அமைச்சர்களிடம் கூட சொல்லாமல் புறப்பட்டார். முதல்வர் புறப்படுகிறார் என தெரிந்ததும், அந்த பங்களாவில் வேறு ஒரு அறையில் இருந்த அமைச்சர் புஸ்சி ஆனந்த், விஜய்யை பார்ப்பதற்காக, ஓடோடி சென்றுள்ளார்.
ஓடோடி வந்த வேகத்தில், எதிரில் இருந்த கண்ணாடி கதவுகள் மூடி இருந்ததை கவனிக்கவில்லை. அது, திறந்திருப்பதாக நினைத்திருக்கிறார். இதனால் ஓடோடி வந்தவர், அந்த கண்ணாடி கதவுகளில் மோதி விழுந்துள்ளார் புஸ்சி ஆனந்த். இந்த மோதலில், அவரது முகம் உட்பட உடம்பில் பல்வேறு இடங்களில் ரத்தம் வரும் வகையில் காயம் ஏற்பட்டது. உதடுகள் சற்று கிழிந்துள்ளது. இதனைக் கண்டு அங்கிருந்த மற்றவர்கள் பதறித் துடித்து, அவரைத் தூக்கி, அழைத்து வந்து ஷோபாவில் அமர வைத்தனர்.
ஷாக் ஆன முதல்வர் விஜய்
இதனைக் கேட்டு ஷாக் ஆன முதல்வர் விஜய், காரிலிருந்து கீழிறங்கி மீண்டும் பங்களாவுக்குள் வந்தவர், புஸ்சி ஆனந்தை பார்த்து, என்ன நீங்க... பார்த்து வர வேண்டாமா? எதுக்கு அவ்வளவு வேகம் ? மெல்ல வர வேண்டியது தானே... என்னை பார்க்கலைன்னா என்ன? என்று சொல்லி விட்டு, உடனடியா ஹாஸ்பிட்டலுக்குப் போங்க. ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டுவிட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க என அட்வைஸ் பண்ணியதுடன், புஸ்சி ஆனந்தை அனுப்பி வைத்துவிட்டுத்தான் முதல்வர் விஜய் புறப்பட்டு சென்றுள்ளார்.
சென்னையில் முதலுதவி எடுத்துக்கொண்ட புஸ்சி ஆனந்த், பாண்டிச் சேரி சென்று அங்கு முழுமையான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டார். பாண்டிச்சேரியிலேயே புஸ்சி ஆனந்திற்கு இரண்டு நாள் ரெஸ்ட்!
அபசகுனாமா?
ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்த புஸ்சி ஆனந்தை தொடர்புக்கொண்டு பேசி, உடல் நலத்தை விசாரித்திருக்கிறார் முதல்வர் விஜய். அதேசமயம், விஜய்யின் புதிய பங்களாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்து, ரத்தம் சிந்தி யிருப்பது ஏதேனும் அபசகுனாமா? அபசகுனம் என்றால் ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா? என்று ஜோதிடர்களின் ஆலோசனையை கேட்டுள்ளனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
முதல்வர் வீட்டில் கண்ணாடி கதவுகளில் மோதி காயம்பட்ட புஸ்சி ஆனந்த் பற்றிய தகவல் மற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து மெல்ல மெல்ல கசிந்து தவெக முழுவதும் பரவிக் கிடக்கிறது.
- சிறப்பு நிருபர் எழில்



Click it and Unblock the Notifications
