"தீபத்தூணில் தீபத்தை காண திருப்பரங்குன்றத்திற்கு நாளை வருகிறோம்! நன்றி முருகா!" தமிழிசை மகிழ்ச்சி
சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபமேற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் "தீபத்தூணில் தீபத்தை காண நாளை வருகிறோம். நன்றி முருகா" என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் தீபம் ஏற்றாமல் இருந்ததை கண்டித்து இருக்கிறது ...
நாங்கள் உங்களை ஏற்ற முடியுமா என்று கேட்கவில்லை, ஏற்ற வேண்டும் என்று தான் சொன்னோம்.
காரணங்களை கேட்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. உச்ச நீதிமன்றம் ஒரு இடைக்காலத் தீர்வை சொன்ன பின்பு அதற்கு பின்பு எந்த விளக்கமும் தேவையில்லை . எந்த விவாதமும் தேவையில்லை. நேரடியாக விளக்கு ஏற்றப்பட்டு இருக்க வேண்டும்.
ஆட்சியும் தவறு செய்திருக்கிறது.

ஆட்சியரும் தவறு செய்திருக்கிறார். அறங்காவலர் குழுவும் தவறு செய்திருக்கிறது. இன்னும் கடுமையாக உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. மதுரை ஆட்சியர் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்று ஆட்சியர் கொடுத்த மன்னிப்பின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை ஒப்புதலும் இல்லை.
இதையெல்லாம் உச்சநீதிமன்றம் தமிழக அரசை பார்த்து சொன்ன நீதியின் வலிமையான வார்த்தைகள்... நீதிமன்றத்தை அப்பட்டமாக மீறி இருக்கிறீர்கள்.. இதுதான் தமிழக அரசைப் பார்த்து உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கும் வலிமையான நீதி வார்த்தைகள்.. எதிர்பார்ப்போம் தீபம் எதிர்த்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று?" என வாதங்களின் போது தமிழிசை பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழிசை தனது பதிவில் கூறியிருப்பதாவது: "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. வீரவேல் முருகனுக்கு அரோகரா... வருகிறோம் வருகிறோம்.. தீபத்தூணில் தீபத்தை காண வருகிறோம்.. நன்றி முருகா" என குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றுவது தொடர்பான வழக்கில் கடந்த 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதாவது இந்த ஒரு முறை ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இனி வரும் ஆண்டுகளுக்கு பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபத்தின் போது மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் உச்சிபிள்ளையார் கோயிலில்தான் தீபமேற்றப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 20ஆம் தேதி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றாதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் , பாஞ்சோலி ஆகியோர் வேதனை தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள், ஒரு கட்சிக்கு கீழ்ப்படிந்துவிட்டனரா என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "நாளை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். கடந்த 24 ஆம் தேதி உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து தீயை எடுத்துக் கொண்டு தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். சிக்கந்தர் தர்காவை சுற்றி 50 மீட்டர் தூரத்தில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். திருப்பரங்குன்றம் மலை பகுதி முழுவதும் CRPF கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்.
தர்காவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தர்காவிற்கு செல்வோரை யாரும் தடுக்கக் கூடாது. தர்காவையும் கோயிலையும் வேறுபடுத்தி காட்டும் வகையில் வேலி அமைத்துக் கொள்ளலாம்" என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர்.




Click it and Unblock the Notifications
