அருள் விக்னேஷை காப்பாற்ற சமரசமாக செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் - ஸ்டாலின்
சென்னை: பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.

நீதிமன்ற தலையீட்டுக்குப் பின் கலெக்டரிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் 5 பிரிவுகளின்கீழ் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட எஸ்பி சிருஷ்டி சிங் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினார்.
நேற்று கலெக்டர் அலுவலக முகாம், ஒருங்கிணைந்த வன அலுவலகத்துக்கு சென்று 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்றும் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது தவெக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!" எனத் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
