தவெகவை நம்பி போன காங்கிரஸ்.. திமுக கவசத்தில் விழுந்த ஓட்டை.. என்ன சொல்கிறார் ஷ்யாம்
சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவுக்கு இப்போது பல பக்கங்களில் இருந்தும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. ஒருபக்கம் காங்கிரஸின் நிலைப்பாடு, மறுபக்கம் தவெகவின் அரசியல் நகர்வு என திமுகவின் கூட்டணி கணக்கும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுகவின் அரசியல் கவசத்திலேயே ஓட்டை இருப்பதாக அரசியல் விமர்சகர் ஷ்யாம் கூறியுள்ளார்.
The TN Voice சேனலுக்கு மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞரும், அரசியல் திறனாய்வாளருமான ஷ்யாம் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அரசியல் ரீதியாக திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது.

தொகுதி மறுவரையறை
நமது அரசியல் சாசனம் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத்தைத்தான் சொல்கிறது. நாட்டின் தேர்தல் வரைபடம் எம்பி அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் மக்கள் தொகை அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் பாதிக்கப்படாமல் இருந்தால், அதை எதிர்க்க முடியாது, எதிர்க்கவும் கூடாது என்று காங்கிரஸ் பேசுகிறது. ஆனால், தெலங்கானா காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, நியாயமான தொகுதிகள் கிடைத்தால் வரவேற்போம் என்கிறார். கர்நாடக காங்கிரஸ் இதை எதிர்க்குமா? தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு மாதிரியாகப் பேசுகிறது. மற்ற மாநில காங்கிரஸ் கட்சிகளின் நிலைப்பாடு வேறாக இருக்கிறது.
தவெக - காங்கிரஸ்
காங்கிரஸின் நிலைப்பாடும் தவெகவின் நிலைப்பாடும் சேர்ந்து திமுகவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எடுக்கப்பட்டதாகத்தான் தெரிகிறது. இந்த விவகாரத்தில் பாஜகவை எதிர்க்க வேண்டுமா, ஆதரிக்க வேண்டுமா என்ற தர்மசங்கடத்தை திமுகவுக்கு உருவாக்க வேண்டும். அதேபோல, "பாஜக ஆதரவு" என்ற முத்திரை விழுந்துவிடக் கூடாது என்ற குழப்பத்திலும் திமுகவை சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
திமுக அந்தத் தனித் தீர்மானத்தை எதிர்த்திருந்தாலும், குரல் வாக்கெடுப்பில் தீர்மானத்தை ஆதரிப்பவர்களே அதிகமாக இருந்திருப்பார்கள். அதனால் தீர்மானம் நிறைவேறியிருக்கும். அப்படி நடந்திருந்தால், திமுக பாஜக வலையில் சிக்கிவிட்டது என்றும், பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவிட்டது என்றும் ஒரு பிம்பம் உருவாகியிருக்கும். அது திமுகவுக்கு பின்னடைவாக அமைந்திருக்கும்.
தந்திரமாக பின்வாங்கும் திமுக
அதனால் திமுக தந்திரமாக பின்வாங்குகிறது. ஆனால் ஆதவ் அர்ஜுனா என்ன சொல்கிறார் என்றால், நாளை சட்ட மசோதா விவாதத்துக்கு வரும்போது திமுக வெளிநடப்பு செய்யாமல் எதிர்த்து வாக்களித்தால்தான் அந்தச் சட்டத்தைத் தோற்கடிக்க முடியும் என்கிறார்.
ஆனால் திமுகவால் வெளிநடப்பும் செய்ய முடியாது, ஆதரவாகவும் வாக்களிக்க முடியாது. அப்படி ஏதாவது செய்தால் அது பாஜகவுக்குத்தான் சாதகமாக அமையும் என்ற நிலைக்கு தவெக திமுகவைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. திமுக சாமர்த்தியமாகத் தப்பிக்க வேண்டும் என்று தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், தவெக அரசு கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தின் மூலம் திமுகவின் கவசத்திலும் படைபலத்திலும் ஒரு ஓட்டை இருக்கிறது என்பதை உணர்த்திவிட்டார்கள்.
மேலும், திமுக மட்டும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறதா? எந்தப் பக்கம் செல்வது என்று தெளிவான முடிவு எடுக்க முடியாத நெருக்கடியில் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தியா கூட்டணி
இப்போது அவர்களுக்குக் கூட்டணியே இல்லை. இந்தியா கூட்டணியும் இல்லை. காங்கிரஸுடனும் அவர்களால் இணைய முடியாது. அவர்களுடன் இருந்த எல்லாக் கூட்டணிக் கட்சிகளும் தவெக பக்கம் இருக்கின்றன.
மேலும், 59 நாடாளுமன்றத் தொகுதிகள் வரும்போது நம்முடைய வாக்கு வங்கியை வைத்தே வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுக ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கலாம். ஆனால் தவெகவைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளுக்கு நிறைய தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் திமுக அதிகத் தொகுதிகளில் போட்டியிடும்" என்று தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
