திமுகவிடம் செய்ததை போலவே.. வேலையை காட்டிய காங்கிரஸ்.. உ.பியில் கூட்டணியையே உடைக்கும் அகிலேஷ்?
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 403 தொகுதிகளில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டன. ஆனால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி காட்டி வரும் பிடிவாதத்தால், இந்தக் கூட்டணி எந்த நேரத்திலும் உடையலாம் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

பிடிவாதம் பிடிக்கும் காங்கிரஸ் - கடுப்பான அகிலேஷ்!
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, காங்கிரஸ் கட்சி முதலில் 181 தொகுதிகளைக் கேட்டதாகவும், பின்னர் 120 முதல் 130 தொகுதிகளுக்குக் குறையாமல் வேண்டும் எனப் பிடிவாதம் பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கள நிலவரத்தைக் கருத்தில் கொண்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸுக்கு வெறும் 26 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். மேலும், காங்கிரஸ் கேட்ட சஹாரன்பூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையாக வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. இன்று அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், வெற்றி வாய்ப்புள்ள 26 இடங்களோடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம்.. களத்தில் உழைப்பவர்களுக்கே முன்னுரிமை.. என அகிலேஷ் யாதவ் கறாராகத் தெரிவித்துவிட்டார். மறுபுறம், 26 சீட் என்ற பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் தலைவர்கள் அடம்பிடிக்கின்றனர். காங்கிரஸின் இந்தப் போக்கால் அதிருப்தி அடைந்துள்ள சமாஜ்வாதி தலைமை, கூட்டணியை முறித்துக் கொள்ளும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் திமுகவுக்கு செய்ததை உ.பி.யிலும் செய்யும் காங்கிரஸ்?
காங்கிரஸ் கட்சியின் இந்தப் பிடிவாதப் போக்கைப் பார்க்கும்போது, தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் செய்த அதே குழப்ப அரசியலை உத்தரப்பிரதேசத்திலும் அரங்கேற்றுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பலமுறை அங்கம் வகித்த காங்கிரஸ், தேர்தல் நேரங்களில் தனது பலத்திற்கு மீறிய தொகுதிகளைக் கேட்டுப் பிடிவாதம் பிடிப்பதையும், ஆட்சியில் பங்கு கேட்டு நெருக்கடி கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தது. பலவீனமான இடங்களில் அதிக தொகுதிகளை வாங்கிப் போட்டியிட்டுத் தோல்வியடைவதன் மூலம், ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பையும் காங்கிரஸ் பலமுறை பாதித்ததுண்டு. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைய இது முக்கியமான காரணமாக இருந்தது.
இப்போது அதே பாணியைத்தான் உத்தரப்பிரதேசத்திலும் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. அதற்கு முன்பு 2017 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து 114 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 7 இடங்களில் மட்டுமே வென்று கூட்டணியின் படுதோல்விக்குக் காரணமாக அமைந்தது.
பாஜகவுக்கு மறைமுக உதவி?
தற்போதும் பலமே இல்லாத நிலையில் 120 இடங்களைக் கேட்டு காங்கிரஸ் பிடிவாதம் பிடிப்பது, கூட்டணியைப் பலவீனப்படுத்தி மறைமுகமாக பாஜக வெற்றி பெறவே உதவும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர். காங்கிரஸுக்கு அதிக இடங்களைக் கொடுத்தால், அவர்களால் ஜெயிக்கவும் முடியாது; எங்களையும் ஜெயிக்க விடமாட்டார்கள் என்பதே அகிலேஷ் யாதவின் எண்ணமாக உள்ளது.
இதன் காரணமாகவே, நேற்று சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அகிலேஷ் யாதவ், கூட்டணியை நம்பியிருக்காமல் தனித்துப் போட்டியிடவும் தயாராகும் வகையில் தனது பிடிஏ (PDA - பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் சார்ந்த அரசியல்) வியூகத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தனது பிடிவாதத்தைத் தளர்த்தி யதார்த்தத்தை உணராவிட்டால், உத்தரப்பிரதேசத்தில் 'இந்தியா' கூட்டணி உடைவது உறுதி என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications
