சென்னை பல்கலைக்கழக பதிவாளருக்கு ஆளுநர் வார்னிங்.. கிறிஸ்தவ படிப்புகள் கடைசி நேரத்தில் ரத்து
சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் (Institute of Distance Education - IDE), 2026-2027 கல்வியாண்டு முதல் கிறிஸ்தவ மதம் சார்ந்த இரண்டு புதிய சான்றிதழ் படிப்புகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை தலையீட்டைத் தொடர்ந்து அந்த படிப்புப கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுக் கூட்டம், பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 45 கருப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2026-27 கல்வியாண்டு முதல் கிறிஸ்தவ ஆய்வுப் படிப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் (Institute of Distance Education - IDE), 2026-2027 கல்வியாண்டு முதல் ஒரு டிப்ளமோ படிப்பும், இரண்டு சான்றிதழ் படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சிண்டிகேட் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து, செனட் கூட்டத்தின் பரிசீலனைக்கு அனுப்ப கல்விக்குழுவின் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட படிப்புகள்:
ஃபின்டெக் (Fintech) டிப்ளமோ படிப்பு.
கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் சான்றிதழ் படிப்பு - தமிழ் மற்றும் ஆங்கில வழியில்.
வங்கி செயல்பாடுகள் (Banking Operations) சான்றிதழ் படிப்பு - தமிழ் மற்றும் ஆங்கில வழியில்.
இந்தப் படிப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் விதிமுறைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2027-2028 கல்வியாண்டு முதல் மேலும் இரண்டு புதிய சான்றிதழ் படிப்புகளைத் தொடங்க சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், கிறிஸ்தவ ஆய்வுகள் வாரியத்தின் பரிந்துரையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது
அவை:
பிரான்சிஸ்கன் ஆன்மிகம் (Franciscan Spirituality) சான்றிதழ் படிப்பு.
பெந்தெகொஸ்தே இறையியல் (Pentecostal Theology) சான்றிதழ் படிப்பு.
இந்த இரண்டு படிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வழங்கப்பட உள்ளதாகவும், 2027-2028 கல்வியாண்டு முதல் இவை தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கட்டிடத்தில் கடந்த நவம்பர் 25ம் தேதி நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்திற்காக வெளியிடப்பட்ட அசல் இறுதி நிகழ்ச்சி நிரலில் (Final Agenda) 16-வது பொருளாக இந்த முன்மொழிவு இடம்பெற்றிருந்தது. பதிவாளர் பேராசிரியர் டாக்டர் ரீட்டா ஜான் உத்தரவின்பேரில் நவம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரலிலும் இருந்தது
மேலும் அந்த நிகழ்ச்சி நிரலில் கடந்த ஏப்ரல் 1, 2026 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் கிறிஸ்தவ ஆய்வுகள் துறை வாரியத்தின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கல்விக் குழுவின் நிலைக்குழுவும் இந்த முன்மொழிவுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
கிறிஸ்தவ ஆய்வுகள் துறைத் தலைவர் டாக்டர் கே. ஜேம்ஸ் பொன்னையா, இந்தப் பரிந்துரையை விதிமுறைகள் மற்றும் பாடத்திட்டத்துடன் செனட் ஒப்புதலுக்காக முன்வைக்க இருந்ததாகவும், இதற்கான ஆவணங்கள் இணைப்பு 8-ல் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
எம்ஏ கிறிஸ்தவம்
சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே கிறிஸ்தவ ஆய்வுகள் துறை செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் முதுகலைப் பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கிறிஸ்தவ ஆய்வுகள் தொடர்பான எம்.ஏ. படிப்பை இணைப்புக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில், குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவுகளின் கொள்கைகள் மற்றும் ஆன்மிக நடைமுறைகளை மையமாகக் கொண்ட மேலும் இரண்டு படிப்புகளைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையில் அறிமுகப்படுத்தும் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரான்சிஸ்கன் ஆன்மிகம்
பிரான்சிஸ்கன் ஆன்மிகம் என்பது புனித பிரான்சிஸ் அசிசியால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் துறவற மரபை அடிப்படையாகக் கொண்டது. பெந்தகொஸ்தே இறையியல் என்பது பரிசுத்த ஆவியின் நேரடி அனுபவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவப் பிரிவின் இறையியல் சார்ந்தது ஆகும்.தமிழகம் முழுவதும் ஏராளமான மாணவர்களைச் சென்றடையும் அரசு நிதியுதவி பெறும் பொதுப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில், குறிப்பிட்ட மதப் பிரிவுகளின் ஆன்மிகம் மற்றும் இறையியல் சார்ந்த படிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்த கேள்விகளை பலரும் எழுப்பி விவாதம் செய்தனர்.
ஆளுநர் தலையீட்டால் நீக்கப்பட்டதா 16-வது பொருள்
இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரும் சென்னை பல்கலைக்கழக வேந்தருமான ஆளுநரின் தலையீட்டைத் தொடர்ந்து, 16-வது பொருள் முழுமையாகக் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்காகப் பின்னர் புழக்கத்தில் விடப்பட்ட திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இந்த இரண்டு கிறிஸ்தவப் படிப்புகள் தொடர்பான முன்மொழிவு இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக, அடுத்ததாக இடம்பெற்றிருந்த சமூகவியல் டிப்ளமோ படிப்புகள் தொடர்பான பொருள் 16-வது பொருளாக மாற்றப்பட்டுள்ளது.
ஆளுநர் எச்சரிக்கை
இதன் மூலம், கல்விக் குழுவின் விவாதத்துக்கு வருவதற்கு முன்பே கிறிஸ்தவப் படிப்புகள் தொடர்பான முன்மொழிவு நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் ரீட்டா ஜானுக்கு ஆளுநர் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, கடைசி நேரத்தில் இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லயோலா கல்லூரி, டான் போஸ்கோ சர்ச்சை
சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் ரீட்டா ஜானின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக எழுப்பப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சில கிறிஸ்தவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள். குறிப்பாக, சென்னையில் உள்ள லயோலா கல்லூரி மற்றும் பாரிஸில் உள்ள டான் போஸ்கோ சர்வதேச ஊடக அகாடமி (Don Bosco International Media Academy - DBIMA) ஆகியவற்றுடன் தொடர்புடைய கல்வித் திட்டங்கள் குறித்து புகார்கள் எழுந்திருக்கிறது.
லயோலா கல்லூரியின் புதுச்சேரி பல்கலைக்கழகத்துடனான இரட்டை பட்டப்படிப்பு திட்டங்கள் மற்றும் டான் போஸ்கோ சர்வதேச ஊடக அகாடமியுடன் இணைந்து நடத்தப்படுவதாகக் கூறப்படும் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படிப்பு ஆகியவை உரிய அனுமதிகளைப் பெற்றுள்ளனவா என்ற கேள்விகளை சிலர் எழுப்பினார்கள்.
தகவல் அறியும் உரிமை சட்டம்
சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்து பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழான பதில்களில், குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தின் இணைப்பு அல்லது அனுமதி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகளை சிலர் எழுப்பி உள்ளார்கள். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் கல்வி ஒத்துழைப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்றும், இதனால் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களின் அங்கீகாரம் மற்றும் வெளிநாட்டு விசா நடைமுறைகளில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் புகார்களில் சுட்டிக்காட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், இந்தப் புகார்கள் மீது பதிவாளர் அலுவலகம் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் விளக்கம் கேட்பதைத் தாண்டி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
நடுநிலை என்ன
ஒருபுறம், கிறிஸ்தவ ஆய்வுகள் தொடர்பான புதிய சான்றிதழ் படிப்புகளை கல்விக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்வதில் வேகம் காட்டப்பட்டதாகவும், மறுபுறம் லயோலா கல்லூரி மற்றும் டான் போஸ்கோ தொடர்பான கல்வித் திட்டங்கள் மீதான புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று புகார்தாரர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இதனால், பொதுப் பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட மதம் சார்ந்த படிப்புகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளும், சில சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீதான புகார்கள் கையாளப்படும் விதமும் தொடர்பாகப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடுநிலைத் தன்மை குறித்து கேள்விகளை குற்றச்சாட்டு வைப்போர் எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications
