கொரியரில் வந்த போதை பொருட்கள்! மாறுவேடத்தில் சென்று மடக்கி பிடித்த மாதவரம் போலீஸார்! 2 பேர் கைது
சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் போன்ற போதைப் புகையிலைப் பொருட்களை சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே கூரியர் பார்சல் மூலம் கடத்தி விற்பனை செய்ய முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 80 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாதவரத்தை அடுத்த பால்பண்ணை, கொசப்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கூரியர் நிறுவனங்கள் மூலம் கொண்டு வரப்பட்டு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுவதாக மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு மாறு வேடத்தில் சென்று ரகசியமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அஞ்சார் (23), தோசிப் (24) என்பது தெரியவந்தது. இருவரும் சென்னை பெரம்பூர் காந்தி தெருவில் தங்கியிருந்து தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், பெங்களூருவில் உள்ள தங்களுக்குத் தெரிந்த நபர் மூலம் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கூலிப் போன்ற போதைப் புகையிலைப் பொருட்களை பார்சல்களாக பெற்று வந்ததும் தெரியவந்தது. அந்தப் பார்சல்கள் சென்னை வடபெரும்பாக்கத்தில் உள்ள கூரியர் நிறுவனத்திற்கு வந்ததும், அவற்றைப் பெற்றுக் கொண்டு சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து பெரம்பூர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பதுக்கி வைத்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடமிருந்து சுமார் 80 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கூரியர் பார்சல் மூலம் குட்கா பொருட்கள் சென்னைக்குக் கடத்தி வரப்பட்டு, சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து விற்பனை செய்யப்பட இருந்ததை ரகசிய தகவலின் அடிப்படையில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்த மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
