கஞ்சா பிசினஸுக்காகவே வீடு வாடகைக்கு எடுத்த கேரள தம்பதிகள்.. ஒடிசா டூ கொடைரோடு.. சிக்கியது எப்படி?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள ஜல்லிபட்டி பகுதியில் ஒடிசா மாநிலத்திலிருந்து கடந்தி வரப்பட்டு கஞ்சா விற்பனை செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த கணவன், மனைவி உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள ஜல்லிப்பட்டி பகுதியில் ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி அம்மையநாயக்கனூர் காவல்நிலைய ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான காவல் துறையினர், இன்று காலை திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

உயர் ரக கஞ்சா விற்பனை
அப்போது, சத்தேகத்திற்கு இடமாக ரயில்வே பாலம் அருகே இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவர்களை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த செபாஸ்டின் சனு (38), அவரது மனைது கஸ்தூரி (32), கொச்சின் பாலம்பரம்பில் முன்டன் வேலியைச் சேர்ந்த அபிலேஷ் (27), அவரது மனைவி அகிலா (21) என்பது தெரியவந்து.
இவர்கள் அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து, ஒடிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து கொடைரோடு பகுதியில் சில்லரை வியாபாரம் செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் 5 கிலோ உயர்ரக கஞ்சாவை கைப்பற்றிய அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கடும் நடவடிக்கை
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இந்த ஆண்டில் இதுவரை கஞ்சா தொடர்பாக 397 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 640 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 288 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 16-குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை சட்டவிரோதமாகக் கடத்துதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தார்.


Click it and Unblock the Notifications
