“தொடமாட்டோம்னு சொன்னீங்களே”.. விஜய்யை விமர்சித்து அறப்போர் வெளியிட்ட பாடல் BLOCK.. பரபரப்பு புகார்
சென்னை தவெக ஆட்சி 6 மாதங்களை கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். ஆனால் தவெக ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருகின்றன. டெண்டர் விவகாரம் தொடர்பாக விஜயை கூறிய வசனத்தை, பாடலாக தயாரித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவை இந்தியாவில் இன்ஸ்டாகிராம் பிளாக் செய்துள்ளதாக பகீர் புகார் எழுந்துள்ளது.

மக்கள் பணத்தை தொட மாட்டோம். தொடவும் விட மாட்டோம் என்றும் விஜய் முதலமைச்சர் கூறினார். இதனிடையே, அனைத்துத்துறைகளிலும் ரூ.50 லட்சத்திற்கு கீழ் உள்ள அரசுப் பணி ஒப்பந்தங்களை, ஆன்லைன் டெண்டர் விட தேவையில்லை என்று நிதித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். வெளிப்படைத்தன்மையை சந்தேகமாக்கும். ஊழலுக்கு வழி வகுக்கும். தவெக சொன்ன நிலைப்பாட்டுக்கு நேர் எதிரானது என்று விமர்சித்தனர்.
இன்ஸ்டாகிராமில் பிளாக்
இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர். இதுகுறித்து அறப்போர் இயக்கம் சார்பில், விஜய் போட்டோவுடன் "தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம்னு சொன்னீங்களே?" என்கிற ஒரு பாடலை நேற்று சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். 50 லட்சத்திற்குக் கீழான பணிக்கு ஆன்லைன் டெண்டர் போடாமல், கொட்டேசன் (Quotation) முறையில் போடலாம் என்று அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பாடலை இன்ஸ்டாகிராம் பிளாக் செய்துள்ளது. இதுகுறித்து அறப்போர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், வெளிப்படையான ஆட்சியைத் தருவோம் என்று சொல்லிவிட்டு, அதற்கு நேர் எதிராக மறைத்து வைக்கக்கூடிய டெண்டர்களை போடுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதை கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பாடல் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்தப் பாடல் வெளியிடப்பட்டு பரவத் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே, இந்திய சட்டரீதியான தேவைக்கு உட்பட்டு. இன்ஸ்டாகிராமில் இந்தியாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் காட்டுகிறது.
கருத்துரிமைக்கு எதிரான செயல்
இது அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு அரசை நியாயமாகக் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பாடலை இப்படி இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருப்பது, பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிரான செயலாகவே பார்க்க முடிகிறது. இதை யார் செய்திருந்தாலும், அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது எந்தக் காரணத்திற்காக அல்லது எந்தவிதமான சட்ட விதிகளை மீறியது என்று எந்த அறிவிப்பும் இல்லை. இதை தமிழ்நாடு காவல்துறை செய்ததா?, வேறு யாராவது செய்தார்களா?? அல்லது இன்ஸ்டாகிராமே இதை பிளாக் செய்ததா? என்பது இந்த நிமிடம் வரை புரியவில்லை.
இந்த வீடியோ இந்தியாவில் மட்டும் எப்படி தடுக்கப்பட்டுள்ளது என்றும், வெளிநாடுகளில் தெரிகிறது. டெண்டர்கள் மறைத்து வைக்கப்பட மட்டும் ஆணைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படி மறைக்காமல் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கேட்கும் வீடியோக்களும் தற்போது மறைக்கப்படுகிறது. ஊழலுக்கு எதிராக அறப்போர் தொடரும் என்று கூறினார். முன்னதாக பத்திரிகையாளர் அருண் ராம், தவெக நிர்வாகிகள் செயல்பாடு குறித்து விமர்சித்து கட்டுரை எழுதிருந்தார்.
இது.. அதுல்ல..
அது பரபரப்பை ஏற்படுத்தியது. அருண் ராம் சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜயை தலைமை செயலகத்தில் சந்தித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். விஜயுடன் அவர் எடுத்த அந்த புகைப்படம் மட்டும் அருண் ராம் இன்ஸ்டாகிராம் நீக்கப்பட்டது. இதுகுறித்து அவர் புகார் கூறியிருந்தார். அதே பாணியில் தவெக, விஜய் மீதான விமர்சனத்திற்கு தவெக ஐடி விங் ஆற்றும் எதிர்வினை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
