திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாளையே தீபம் ஏற்றியாக வேண்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள், நாளை மீண்டும் மலை உச்சியில் தீபத்தை ஏற்றியே ஆக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் இந்த ஆண்டும் பெரிதாக வெடித்தது. இந்த ஒரு ஆண்டு மட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியது. ஆனால், நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீப நாளன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக உச்சி பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நீதிமன்றத்திடம் மன்னிப்பும் கோரியிருந்தார். உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவே தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் இருப்பினும், கோயில் நிர்வாகத்தினர் தங்களிடம் எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றிவிட்டதாக கூறியிருந்தார்.
இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக கூறி மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய், மதுரை காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், காவல் துணை ஆணையர் இனிகோ விஜயன், கோயில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுதாரர் ராம ரவிக்குமார் தனது மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் இருக்க தமிழக முதல்வர் அல்லது அமைச்சர்கள் யாரேனும் உத்தரவிட்டார்களா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும் என கோரியுள்ளார். இது தொடர்பாக அரசு எடுத்த முடிவுகள் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு 7 நாட்களுக்குள் புதிய தேதியை உச்ச நீதிமன்றமே நிர்ணயிக்க வேண்டும் என்றும் உத்தரவை தடுக்க உத்தரவிட்டவர்கள் மீது குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவமதிப்பு மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்களை இன்று நவம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தனர். நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி வி. பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் இந்த வழக்கு விசாரணை 12 மணிக்கு தொடங்கியது.
அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் மனுதாரர் சார்பில் இரு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அறங்காவலர் உறுப்பினர்கள் உடனடியாக அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முதலில் முன்வைக்கப்பட்டது.
உடனடியாக குறிப்பிட்ட அந்த இடத்தில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 11 நாட்களுக்கு இந்த திருவிழா என்பது நடக்கும் என்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த தீபத்தை ஏற்றலாம் எனவே உடனடியாக அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
வாதங்கள் நிறைவடைந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அவமதிப்பு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். நீதிபதிகள் அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு தீர்ப்பை வாசித்தது.
அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தாமல் இருந்தது தங்களுக்கு கடுமையான வேதனையை கொடுக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஜனநாயகத்தில் சட்டத்தின் ஆட்சியே பிரதானம் என்றும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் மதுரையில் நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது என்ற திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர் மேலும் இந்த விவகாரத்தில் தலைமை செயலாளர் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவுகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதிகள், நாளை மீண்டும் மலை உச்சியில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டனர். சிஆர்பிஎப் படை வீரர்கள் பாதுகாப்புடன் கோவில் இடத்தில் தீபத்தை ஏற்றியாக வேண்டும் என உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


Click it and Unblock the Notifications
