அருள் விக்னேஷ் வழக்கில் வாதாட State PP ஜான் சத்யனுக்கு நோ? வேறு வழக்கறிஞரை நியமித்த பெண் ஆட்சியர்?
சென்னை: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தனக்காக ஆஜராக தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் (Tamil nadu state's public prosecutor) இருந்த போதிலும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சுதந்திரமாக எடுத்துரைக்க வேறு ஒரு வழக்கறிஞரை, அந்த பெண் ஆட்சியர் நியமித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, அவரது முகாம் அலுவலகத்திற்கு மதுபோதையில் சென்றது என்பன உள்ளிட்ட புகார்களின் கீழ் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த மெசேஜ் அனுப்பிய விவகாரம் நடந்து 100 நாட்களுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ மீது ஆளும் கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் புகார்
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், காவல்துறையையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் கடந்த 24 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்த புகாரின் பேரில்தான் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையை ஐஜி காமினி மேற்பார்வையிடுவார். மேலும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின்படி விசாரணை குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம், புகார் தொடர்பான ரகசிய விவரங்களை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை முடித்து டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
போலீஸ் சம்மன்
இதனிடையே எம்எல்ஏ அருள் விக்னேஷ், காவல் நிலையத்தில் 25 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் பேரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி கள்ளக்குறிச்சி வந்த விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், பெண் ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருந்தார். அது போல் நேற்று தொடர்ந்து 2ஆவது நாளாக விசாரணை நடத்தப்பட்டது.
2.15 மணி நேரம் விசாரணை
அது போல் கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்ற நீதிபதியிடம் 2.15 மணி நேரம் பெண் ஆட்சியர் வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது நீதிபதி அறையின் கதவு, ஜன்னல்கள் அனைத்து மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
வேறு வழக்கறிஞர்
அப்போது தன்னிடம் சமாதான பேச்சு நடத்தியவர்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் பெண் ஆட்சியர் வெளிப்படுத்த போகிறாராம். அது போல் தனக்காக வாதாட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன் இருந்தும், அந்த பெண் ஆட்சியர் தனக்காக வேறு ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போதுதான் தெரியவரும்.




Click it and Unblock the Notifications
