கைது செய்யப்படாத அருள் விக்னேஷ்.. பாதுகாப்பு கொடுக்கும் தவெக? நாளை களத்திற்கு வரும் பாஜக மகளிரணி!
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்யாமல் இருக்கும் தவெக அரசை கண்டித்து நாளை பாஜக மகளிரணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லையில் நயினார் நாகேந்திரனும், சென்னையில் தமிழிசை செளந்தரராஜனும் பங்கேற்க உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 31ஆம் தேதியே தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்தும், 116 நாட்களாக அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதனால் அருள் விக்னேஷ் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாமல் தாமதம் செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

தற்போது நீதிமன்ற வழக்கு வந்த பின், பெண் ஆட்சியரிடம் புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் சார்பாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
2 நாட்களாகியும் இதுவரை அருள் விக்னேஷிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவருக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மகளிரணி சார்பாக நாளை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நெல்லையில் நயினார் நாகேந்திரன், சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், ஏபி முருகானந்தன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், மதுரையில் ராம ஸ்ரீனிவாசன், சிவகங்கையில் எச்.ராஜா, அரியலூரில் அஸ்வத்தாமன், வேலூரியில் கார்த்தியாயினி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அருள் விக்னேஷ் விவகாரத்தில் திமுக ஏற்கனவே சிபிஐ விசாரணை கோரி ஆளுநர் ராஜேந்திர அர்லேகரிடம் மனு கொடுத்துள்ளது. அதேபோல் அதிமுக வழக்கு போட்டு வழக்குப்பதிவு செய்ய காரணமாக அமைந்துள்ளது. தற்போது பாஜக நேரடியாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதனால் அருள் விக்னேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



Click it and Unblock the Notifications
