நவம்பர் 30ல் லோக்சபா, டிசம்பர் 2ல் ராஜ்ய சபா.. ஒருநாள் மட்டும் கூடும் நாடாளுமன்றக் கூட்டம்!
டெல்லி: நவம்பர் 30ஆம் தேதி லோக் சபா அமர்வும், டிசம்பர் 2ஆம் தேதி ராஜ்ய சபா அமர்வையும் நடந்த பரிந்துரை செய்து உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். இதனால் மக்களவை தொகுதி மறுவரையறை மசோதா அவையில் மீண்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாத சூழலில், மீண்டும் கூடுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு அவைகளும் இதுவரை அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படவில்லை. 100 நாட்களுக்கு மேலாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு வராமல் நீடிப்பது புதிய சாதனையாக அமைந்தது.

இதற்கு முன் 2008ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது 87 நாட்கள் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாமல் இருந்ததே சாதனையாக இருந்தது. மழைக்கால கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாமல் நீடிப்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. இதனால் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நவம்பர் 30ஆம் தேதி லோக்சபா அமர்வும், டிசம்பர் 2ஆம் தேதி ராஜ்ய சபா அமர்வும் கூட்டப்படும் என்று அறிவித்துள்ளார். அந்தப் பதிவில், அத்தியாவசியமான அரசு பணிகளை மேற்கொள்வதற்காக, லோக்சபா நவம்பர் 30ஆம் தேதியும், ராஜ்ய சபா டிசம்பர் 2ஆம் தேதி மீண்டும் கூட்டுமாறு சபாநாயகரையும், ராஜ்ய சபா தலைவரையும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பணிகளின் அவசர தேவைகளை பொறுத்து, இரு அவைகளின் அமர்வும் டிசம்பர் 3ஆம் தேதியன்று நிறைவடையலாம் என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.


Click it and Unblock the Notifications
