ம்ஹூம்.. இது வேலைக்கு ஆகாது! இந்தியாவுக்கே திரும்பிய 60 டன் தங்கம்! ரிசர்வ் வங்கியின் அதிரடி.. ஏன்?
டெல்லி: வெளிநாடுகளில் கடந்த ஆறு மாதங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 60 டன் தங்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் இந்தியாவுக்கே கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க இருப்பில் இந்தியாவில் மட்டும் வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு 84 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் 77 சதவீதமாக இருந்த உள்நாட்டு தங்க இருப்பு செப்டம்பர் மாத இறுதியில் 84 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் மொத்தமாக சுமார் 880 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. இதில் கடந்த மார்ச் மாத இறுதியில் சுமார் 650 டன் தங்கம் இந்தியாவிலும் மீதமுள்ள 197 டன் தங்கம் வெளிநாடுகளிலும் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் சுமார் 60 டன் தங்கம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தின் அளவு 740 டன்னாக அதிகரித்துள்ளது.
தங்க கையிருப்பு
இதே காலகட்டத்தில் பேங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் சர்வதேச தீர்வுகள் வங்கி எனப்படும் பிஐஎஸ்-ல் வைக்கப்பட்டு இருந்த இந்தியாவின் தங்க கையிருப்பு 197 டன்னில் இருந்து 140 டன்னாக குறைந்து இருக்கிறது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு 880 டன்னாகவே நீடிக்கிறது. அதாவது புதிய தங்கம் வாங்கியதால் இந்தியாவில் இருக்கும் தங்கத்தின் அளவு அதிகரிக்கவில்லை. வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்கத்தை இந்தியாவுக்கு மட்டுமே கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் இருப்பு
இந்தியாவில் தங்கத்தின் இருப்பு அதிகரித்து இருந்தாலும் அதன் மொத்த மதிப்பு குறைந்து இருக்கிறது. அதாவது கடந்த மார்ச் மாத இறுதியில் 115.40 பில்லியன் டாலராக இருந்த தங்க இருப்பின் மதிப்பு செப்டம்பர் மாத இறுதியில் 106.08 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதற்கு சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிந்ததே முக்கிய காரணமாகும்.
விலை வீழ்ச்சி
ஏப்ரல் மாதத்தில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கத்தின் சராசரி விலை சுமார் 4721 டாலராக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் இது சுமார் 4319 ஆக குறைந்தது. அதாவது சுமார் 9 சதவீதம் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசு பத்திரங்களின் வருவாய் உயர்வு, அமெரிக்க டாலரின் மதிப்பு வலு பெற்றது, மற்றும் பணவியலில் கொள்கை மேலும் கடுமையாக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை குறைய தொடங்கியது.
அந்நிய செலாவணி
இதனால் இந்தியாவில் இருக்கும் தங்கத்தின் அளவு அதே அளவாக இருந்தாலும் அதன் மதிப்பு மட்டும் குறைந்து இருக்கிறது. மேலும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கும் குறைந்திருக்கிறது. கடந்த மார்ச் மாத இறுதியில் 16 சதவீதமாக இருந்த தங்கத்தின் பங்கு செப்டம்பர் மாத இறுதியில் 14 சதவீதமாக குறைந்துள்ளது.
பத்திரங்களில் முதலீடு
அதே நேரத்தில் ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி சொத்து பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டின் அளவையும் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் 84.31 சதவீதமாக இருந்த பத்திர முதலீட்டின் பங்கு, செப்டம்பர் மாத இறுதியில் 87.06 சதவீதமாக உயர்ந்துள்ளது. மொத்தம் 608.26 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி சொத்துகளில், 529.57 பில்லியன் டாலர் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
