திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம்.. சீக்ரெட் ஆக நன்கொடை அளித்த தமிழக பக்தர்! பின்னணி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார். தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அவர் கோரிக்கையும் வைத்துள்ளார். இதனால் பக்தர் சார்பில் அந்த தங்க ஆபரணத்தை சந்திரபாபு நாயுடு இன்று கோவிலில் ஒப்படைக்க உள்ளது.
உலகின் பணக்கார கடவுளில் ஒருவராக திருப்பதி ஏழுமலையான் உள்ளார். ஆந்திராவில் உள்ள இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு, காணிக்கை மற்றும் நன்கொடையாக அளிப்பது வழக்கம்.

121 கிலோ தங்கம் நன்கொடை
இதனால், கோவிலில் தினமும் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் சராசரியாக பெறப்படுகிறது. இந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கம் காணிக்கையாக செலுத்த முன்வந்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 160 கோடியில் இருந்து 200 கோடி ரூபாய் வரைக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், திருப்பதி கோவிலுக்கு இந்த 121 கிலோ தங்கம் இன்று வழங்கப்பட உள்ளது. தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று நன்கொடை அளித்தவர் கூறியிருக்கிறார். தமிழகத்தை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் அந்த பக்தர் வெளிநாட்டில் வசித்து வருபவர் என்று சொல்லப்படுகிறது.
பிரத்யேக வடிவமைப்புடன்
9 செட்களாக 45 வகையான ஆபரணங்கள் என 121 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையில் இந்த நகைகள் ஆர்டர் கொடுக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளதாம். அங்கிருந்து பலத்த பாதுகப்புடன் திருமலை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. நன்கொடையாக பெறப்பட்ட தங்க நகைகளை மக்களுக்கு காட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆபரணங்களில் கிரீடம், தோள்பட்டை ஆபரணங்கள், சங்கு மற்றும் சக்கர வடிவிலான ஆபரணங்கள் உள்ளிட்டவை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நகைகள் ஆகம விதிகள் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் வழிபாட்டு நடைமுறைகளுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. லாரிகளில் கொண்டு வரப்பட்டு பிரமாண்ட பாதுகாப்பு பெட்டகங்களை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் எடுத்து செல்லும் காட்சிகள் வைரலாகியுள்ளன.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர்
இந்திய கோவில் வரலாற்றில் தனிநபர் ஒருவர் வழங்கிய மிகப்பெரிய காணிக்கைகளில் ஒன்றாக இந்த தங்க ஆபரணக் காணிக்கை கருதப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவில் அறக்கட்டளை சொத்து மதிப்பு தோராயமாக 2.26 லட்சம் கோடி இருக்கும் என கணக்கிடப்படுகிறது.
இதற்கிடையே, சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வரதமான் ஜெயின் என்பவர்தான் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடை அளித்த நபர் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.
என்ன காரணம்?
அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பாக ஏழுமலையானிடம் வேண்டுதல் வைத்த் இருந்ததாகவும், பின்னர் வெளிநாட்டில் ஐடி நிறுவனம் தொடங்கி, அதில் வெற்றி பெற்ற நிலையில், தனது நிறுவனத்தின் பங்குகளை விற்றதன் மூலம் கிடைத்த தொகையில் ஒரு பகுதியை சமூக பணிகளுக்காகவும், இறை தொண்டுக்காகவும் வழங்க முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.
தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அவர் கடிதமும் எழுதியிருக்கிறார். இதை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications
