தனுஷின் கேரக்டர் ரொம்ப தப்பா இருக்கு.. "மயக்கம் என்ன” படத்தை கிழித்தெடுத்த பிக் பாஸ் அர்ச்சனா
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் ரசிகர்களால் இன்றைக்கும் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்று, "மயக்கம் என்ன" இந்த படத்தை செல்வராகவன் தான் இயக்கியிருந்தார். இதில் தனுஷுடன் யாமினி கேரக்டரில் நடித்த ரிச்சா கங்கோபாத்யா நடிப்பை பலர் பாராட்டி இருந்தனர். ஆனால் இப்போது அந்த கேரக்டரே ரொம்ப தப்பானது, அது மாதிரி யாரும் இருக்கவே கூடாது என பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா ரவீந்தர் பேசி இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை அர்ச்சனா பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் அர்ச்சனா பேசிக் கொண்டிருந்தபோது, மயக்கம் என்ன படத்தை பற்றி பேசி இருக்கிறார். அப்போது, "அந்த படம் எனக்கு சுத்தமா பிடிக்காது.
மயக்கம் என்ன யாமினி மாதிரி ஒரு பொண்ணு இருக்கவே கூடாது. அவங்க வாழ்க்கையை நல்லா வாழ்வதை விட்டுட்டு இன்னொருத்தனுக்காக ஏன் வாழனும்? அவங்க என்ன அன்னை தெரசாவா? அவருக்கு வேற வேலையே இல்லையா? நம்ம வாழ்க்கையை நல்லா மாற்றக்கூடிய ஒருத்தருடன் தான் நாம இருக்கணும். இப்படி எல்லாத்தையும் தியாகம் பண்ணிட்டு இன்னொருத்தனுக்கு ஆகவே வாழ வேண்டிய அவசியம் இல்லை" என்று சொல்லி இருக்கிறார்.
தனுஷ் கேரக்டர்
அதோடு, தனுஷின் கார்த்திக் கேரக்டரையும் அர்ச்சனா விட்டு வைக்கவில்லை. " நண்பனோட காதலின்னு தெரிஞ்சும் அவங்களை காதலிக்கிறது தப்புதானே?. தனுஷ் கேரக்டர் ஒரு ரெட் பிளாக். அவங்க 2 பேருமே ஒரு ரெட் கப்பில். அப்படிப்பட்ட ஜோடியை கொண்டாடுனது தான் ஆச்சரியமா இருக்கு. ஒரு பொண்ணு ஒரு பையனுக்காக இந்த அளவுக்கு தியாகம் பண்ணனும்னு எல்லோரும் எதிர்பார்க்கிறது சரியில்லை" என்று அர்ச்சனா பேசியிருக்கிறார்.
அர்ச்சனா இப்படி வெளிப்படையாக பேசியதுதான் இப்போது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுகிறது. சிலர் அவர் சொல்வது சரிதான், யாமினி மாதிரி எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் எந்த பெண்ணுக்கும் இல்லை என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னொரு பக்கம், அது ஒரு சினிமா கதை அந்த கதாபாத்திரத்தின் சூழ்நிலை புரிந்து கொள்ளாமல் இப்படி பார்க்க கூடாது என்று கருத்தையுமா சொல்லி வருகிறார்கள்.
மயக்கம் என்ன படத்தின் கதை
இங்கே நாமும் கொஞ்சம் அந்த படத்தின் கதையை நினைத்துப் பார்க்க வேண்டியது இரக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியான மயக்கம் என்ன படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். தனுஷ் கார்த்திக் என்ற புகைப்பட கலைஞராக நடித்திருப்பார். வனவிலங்கு புகைப்பட கலைஞராக வேண்டும் என்று கனவுடன் போராடும் கார்த்திக்கு வாழ்க்கையில் அவருடைய நண்பன் சுந்தர் தனது காதலியான யாமினியை அறிமுகப்படுத்துகிறார்.
ஆரம்பத்தில் இருவருக்கும் ஒத்துப்போகாமல் இருந்தாலும் காலப்போக்கில் இவர்களுக்குள் நெருக்கம் அதிகம் ஆகி விடுகிறது. பின்னர் கார்த்திக், யாமினி திருமணம் செய்து கொள்கின்றனர் ஆனால் கார்த்திக்கின் தொழில் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களும், மன அழுத்தமும் அவருடைய குடும்ப வாழ்க்கையும் பாதிக்கின்றது. ஒரு கட்டத்தில் மதுக்கு அடிமையாகி, கோபத்தில் பல பிரச்சனைகளில் சிக்குகிறார். அப்போதும் யாமினி அவருக்கு ஆதரவாக இருக்கிறார்.
தேவதையான யாமினி
கார்த்திக் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவருக்கு பக்கபலமாகவே இருக்கிறார். இந்த பொறுமையும், தியாகம் தான் அப்போது பல ரசிகர்களுக்கு யாமினியை பிடிக்க வைத்தது. ஆனால் பார்க்கும்போது ஒருவருடைய வாழ்க்கையை சரி செய்வதற்காக இன்னொருவர் தன்னுடைய மகிழ்ச்சியையும், கனவுகளையும் தொடர்ந்து தியாகம் செய்து, காதல் என்ற பெயரில் அவமானப்பட்டு பொறுத்துக் கொள்வதுதான் நல்ல உறவா? என்ற கேள்வி தான் அர்ச்சனாவின் பேச்சிலும் தெரிகிறது.
பின்னால் இருக்கும் பிரச்சனை
இந்த படத்தை பார்த்த பிறகு பல ஆண்கள் யாமினி மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கைல முன்னேறிடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் கார்த்திக் மாதிரி ஒரு பையன் அவன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அதற்கு யாமினி மாதிரி ஒரு பொண்ணு தொடர்ந்து அசிங்கப்பட்டு கஷ்டப்பட வேண்டுமா? என்பதும் பலருடைய கேள்வி தான். சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தை ரசிப்பது வேறு, நிஜ வாழ்க்கையில் அதே மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது வேறு அர்ச்சனா எழுப்பி இருக்கும் கேள்வியும் அதுதான். மயக்கம் என்ன படத்தை இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.




Click it and Unblock the Notifications
