திண்டுக்கலில் கிறிஸ்தவ அமைப்புக்கு தரப்பட்ட 2 ஆயிரம் கோடி நிலம்.. கலெக்டர் நேரில் ஆஜராக உத்தரவு
மதுரை: திண்டுக்கல் மாநகரில் உள்ள அரசுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி நிலத்தை மீட்கக்கோரி வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, திண்டுக்கல் மாவட்ட இந்த வழக்கில் நேரில் கலெக்டர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்காக அரசு ஒதுக்கிய நிலம் தற்போது வணிக நோக்கில் பயன்படுத்துவதால், அதனை அரசு மீட்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தேவசகாயம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திண்டுக்கல் மாநநகரில் உள்ள ஏக்கர் நிலம் ஒரு கிறிஸ்தவ அமைப்புக்கு அன்றைய ஆங்கிலேயே அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலத்தை கல்விப்பணிக்காக மட்டும் (அதாவது மாணவர்கள் விடுதி, விளையாட்டு மைதானம், ஆசிரியர் குடியிருப்பு உள்ளிட்டவை) கிறிஸ்தவ அமைப்பு பயன்படுத்த வேண்டும் என்று 1933-ம் ஆண்டில் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தது.
அன்றைய ஆங்கிலேயே அரசு ஒதுக்கிய திண்டுக்கல் மாநகர நிலத்தின் மதிப்பு இன்றைக்கு ரூ.2 ஆயிரம் கோடி என மதிப்பிடப்படுகிறது. சமீபத்தில் இந்த நிபந்தனைகளை மீறி, அந்த நிலத்தில் வணிக வளாகம் உள்ளிட்டவை கட்டப்பட்டிருக்கிறது.நிலங்களை தனிநபர்களுக்கும் கிரையம் செய்து இருக்கிறார்கள். ஆனால் இந்த நிலம் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது. அவ்வாறு இருக்கும்போது தனிநபர்களின் கட்டுப்பாட்டில் சென்றதை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த நிலத்தை மீட்டு அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நவம்பர் மாதம் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் மலையேந்திரன் ஆஜராகி, ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்காக அரசு ஒதுக்கிய நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வருவது சட்டவிரோதம். எனவே உடனடியாக அந்த நிலத்தை அரசு மீட்க வேண்டும் என்றார்.
பின்னர் தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட் நீதிபதிகள், மேற்கண்ட நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி உள்ளனரா? அந்த நிலத்தை மீட்பதில் எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை நவம்பர் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து எதிர்தரப்பினர் பதில் அளிக்க வேண்டும். அது தவிர வருகிற டிசம்பர் 1-ந்தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


Click it and Unblock the Notifications
