நடுவானில் பெல்ட்டால் கழுத்தை நெரித்த பயணி.. கண்ணாடியை உடைத்து கொடூர தாக்குதல்! பரபரப்பு
திருவனந்தபுரம்: அபுதாபியில் இருந்து கொச்சி வந்த இண்டிகோ விமானத்தில் சக பயணியை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், சக பயணியின் முகத்தில் குத்தியதுடன், தனது பெல்ட்டை கழற்றி அவரது கழுத்தை இறுக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமானப் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார் போல விமானங்களில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கும். இதனால் விமானங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவது ரொம்பவே அரிது.

என்ன நடந்தது
அதிலும் குறிப்பாக பயணிகளிடையே எதாவது சண்டை அல்லது வாக்குவாதம் ஏற்பட்டால் உடனடியாக விமான ஊழியர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவார்கள். இருப்பினும், சில நேரங்களில் அவர்களையும் தாண்டி கூட சில மோசமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது அரங்கேறியுள்ளது.
அதாவது அபுதாபியில் இருந்து கொச்சி வந்த இண்டிகோ விமானத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு சக பயணியை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடுவானில் விமானம் பறந்து கொண்டு இருந்தபோது பயணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது சக பயணியை ஒருவர் முகத்தில் குத்தியுள்ளார். அத்தோடு நில்லாமல் பெல்ட்டை எடுதது கழுத்தை இறுக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வாக்குவாதம்
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ரோஷன் மார்ட்டின் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து கொச்சிக்கு வந்த இண்டிகோ விமானம் 6E1404ல் இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே விமானத்தில் பயணம் செய்த திருச்சூரை சேர்ந்த யூசுப் என்பவருடன் ரோஷன் மார்ட்டினுக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
போலீஸ்
இது குறித்து நெடும்பாசேரி போலீசார் கூறுகையில், "விமானத்தில் 30D சீட்டில் ரோஷன் மார்ட்டினும், 31B சீட்டில் யூசுப்பும் அமர்ந்திருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ரோஷன் மார்ட்டின் யூசுப்பின் முகத்தில் குத்தியுள்ளார். இதில் யூசுப்பின் கண்ணாடி உடைந்ததுடன், அவரது வலது கண்ணுக்கு அருகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு நிற்காமல் ரோஷன் மார்ட்டின் தனது பெல்ட்டை முன் சீட்டில் அமர்ந்திருந்த யூசுப்பின் கழுத்தை சுற்றி இறுக்கியுள்ளார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் விமான ஊழியர்களும் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்" என்றார்.
நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக யூசுப் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரோஷன் மார்ட்டினை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான யூசுப்பிடம் விரிவான வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
