முதல்வர் விஜய்க்கு திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் வக்கீல் நோட்டீஸ்.. 48 மணி நேரம் கெடு!
சென்னை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி சார்பில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அந்த தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு மேலே உள்ள இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஜி.பானுபிரகாஷ் ரெட்டி சார்பில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, வக்கீல் கே.அஜய்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமல்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதால் மட்டுமே அந்த உத்தரவு தானாகவே நிறுத்தி வைக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப் பட்ட நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ செய்யும் வரை, அதிகாரிகள் அதனை அமல்படுத்த வேண்டியது கட்டாயம் என்றும் அந்த வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்த தவறியதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும். தமிழக அரசிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் உரிய சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு இந்த வக்கீல் நோட்டீஸுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது, அடுத்தகட்டமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
