சேலம் விமான நிலையம் மூடப்படுகிறதா.. டிசம்பருடன் சென்னை சேவையும் நிறுத்தமா.. காரணம் என்ன?
சேலம்: சேலம் விமான நிலையத்திலிருந்து ஒரு காலத்தில் 4 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், இப்போது சென்னைக்கு மட்டுமே விமான சேவை உள்ளது. அதுவும் டிசம்பர் மாதத்துடன் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சேலம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்ட மக்களும் கவலை அடைந்துள்ளனர்... இதற்கு என்ன காரணம்?
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகிலுள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது... இங்கிருந்து ஒரு காலத்தில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி ஆகிய 4 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

சேலம் விமான நிலையம்
ஆனால், இப்போது பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி ஆகிய 3 நகரங்களுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இப்போது சென்னைக்கு மட்டுமே தினமும் 2 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சாதாரண மக்களும் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசு உடான் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் 2018-ம் ஆண்டு சேலம் விமான நிலையத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால், 2021-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 2023-ம் ஆண்டு உடான் 5.0 திட்டத்தின் கீழ் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் விமான நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்குகிறது. இதில் 80 சதவீதத்தை மத்திய அரசும், 20 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகின்றன.
பயணிகள் எண்ணிக்கை குறைவு
சேலத்திலிருந்து பல நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டபோது தினமும் சராசரியாக 600 பேர் பயணம் செய்தனர். அப்போது விமானங்களில் சுமார் 80 சதவீத இருக்கைகள் நிரம்பின. ஆனால், இப்போது சென்னைக்கு மட்டுமே விமான சேவை இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இப்போது தினமும் சராசரியாக 112 பேர் மட்டுமே பயணம் செய்கிறார்கள். 4 நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்ட காலத்தில் இருந்த பயணிகள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்..
உடான் திட்டத்தின் கீழ் விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு மானிய ஒப்பந்த காலமும் முடிந்துவிட்டது. இதனால் விமான நிறுவனங்கள் சில வழித்தடங்களில் சேவையை நிறுத்தியுள்ளன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சேலையில் இருந்து கொச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இயக்கிய விமானங்களை நிறுத்தியது. இண்டிகோ நிறுவனமும் பெங்களூரு, ஹைதராபாத் வழித்தடங்களில் விமான சேவையை நிறுத்திவிட்டது.
அதே நேரத்தில், சென்னைக்கான விமான சேவையை இண்டிகோ நிறுவனம் அதிகரித்துள்ளது. இப்போது சேலம் - சென்னை இடையே 2 மார்க்கங்களிலும் தினமும் தலா 2 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தமிழக அரசு நிதி
சேலம் விமான நிலையத்துக்கான உடான் திட்டத்தில் தமிழக அரசு 2024-25-ம் ஆண்டில் ரூ.106 கோடி ஒதுக்கியது. 2025-26-ம் ஆண்டில் ரூ.110 கோடி ஒதுக்கியது. ஆனால், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடப்பாண்டுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே 3 ஆண்டு மானிய ஒப்பந்தமும் முடிந்துவிட்டது.
இதனால் விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து விமானங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
டிசம்பரில் சேவை நிறுத்தமா?
இப்படிப்பட்ட சூழலில்தான் இப்போது சென்னைக்கு இயக்கப்படும் 2 விமான சேவைகளையும் டிசம்பர் மாதத்துடன் நிறுத்த விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு உரிய நேரத்தில் மானிய நிதியை வழங்கினால் மட்டுமே டிசம்பருக்குப் பிறகும் விமான சேவையைத் தொடர முடியும் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்ல, அடுத்தகட்ட உடான் திட்ட ஏலத்தில் சேலம் விமான நிலையத்துக்கான வழித்தடங்களையும் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது...
இருந்தாலும் சேலத்தில் விமான சேவைகள் குறைந்திருப்பது தொழில்துறையினர், வணிகர்கள், மாணவர்கள் என பல தரப்பினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் விமான நிலையத்தைப் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி போன்ற நகரங்களுக்கு நேரடியாகச் செல்லும் வசதி இருந்தது. இப்போது அந்த வசதிகள் இல்லாமல் போய்விட்டன.
விமான சேவைகள் குறைந்தால்?
விமான சேவைகள் மேலும் குறைந்தால் மேற்கு மற்றும் வடமேற்கு தமிழகத்தின் தொழில், வணிக வளர்ச்சியும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதனால் சேலையிலிருந்து மற்ற நகரங்களுக்கும் விமான சேவையை மீண்டும் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தக மற்றும் தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்காக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்களாம்...!!


Click it and Unblock the Notifications
