இரு மொழிகளை தேர்ந்தெடுத்தவர்களை மும்மொழிக்கு கட்டாயப்படுத்தக்கூடாது! CBSEக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: நடப்பு கல்வி ஆண்டில், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழி கொள்கையை தேர்ந்தெடுத்த மாணவர்கள் அதேயே தொடர்ந்து படிக்கலாம் என்றும், அவர்கள் கட்டாயமாக இரு மொழி கல்விக்கு திரும்ப வேண்டியது இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில், இரு மொழி கல்வியை தேர்ந்தெடுத்தவர்கள்.. கட்டாயமாக மூன்று மொழி கல்வியை தேர்ந்தெடுக்க வைக்கப்படக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
கடந்த மே 15ஆம் தேதி அன்று, சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில் 2026-27 கல்வியாண்டு முதல், 6-9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக்கொள்கை கட்டாயமாக்கப்பட்டது. இதன்படி, மாணவர்களில் குறைந்தபட்சம் 2 இந்திய மொழிகளையும் 1 வெளிநாட்டு மொழியையும் படிக்க வேண்டும்.

கல்வியாண்டின் இடையில் திடீரென புதிய மொழியை கற்பது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கில் கடந்த செப்.28ம் தேதியன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவில், நடப்பு 6ம் வகுப்பு மாணவர்களுக்கு இதே தளர்வை நீட்டிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்றாவது மொழிக்கு கட்டாய பொதுத்தேர்வு நடத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஏற்கெனவே 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இப்படி இருக்கையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிய சிபிஎஸ்இ, நாடு முழுவதும் உள்ள 23.44 லட்சம் 6ம் வகுப்பு மாணவர்களில்.. 93%க்கும் அதிகமானோர் ஏற்கனவே மூன்று மொழி கல்வியை திட்டத்தை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், வெறும் 4,186 மாணவர்கள் மட்டுமே இரண்டு மொழி திட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தது. இதன் அடிப்படையில் விருப்பப்பட்டு மும்மொழி கல்வியை தேர்ந்தெடுத்த மாணவர்கள்.. அதிலேயே தொடரலாம் என உச்சநீதிமன்றம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போதைய தளர்வின்படி 6-9ம வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாவது மொழியானது பள்ளி அளவிலான அகமதிப்பீடு மூலமாக மட்டுமே மதிப்பிடப்படும். 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் இது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதிகள் ஜோய்மாலியா பாக்சி மற்றும் வி மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது உத்தரவிட்டிருக்கிறது.
ஏற்கனவே மூன்று மொழிகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள், அதே மூன்று மொழிகளுடன் தொடரலாம். இரு மொழிகளை தேர்ந்தெடுத்தவர்களை முன்மொழிக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
