பெண்களுக்கு ரூ.40,000 ஓய்வூதியம், இலவச லேப்டாப்! தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய அகிலேஷ் யாதவ்!
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 ஓய்வூதியம், மாணவர்களுக்கு மீண்டும் இலவச லேப்டாப் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்துவோம் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்திருக்கிறார்.
சமாஜ்வாதி கட்சியின் சார்பில் 3 அடுக்குகளாக தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அடுக்கிலும் மக்கள் மக்கள் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1. முதல் கட்ட வாக்குறுதியில் உ.பியின் எதிர்கால திட்டம் குறித்தும், தொலைநோக்கு பார்வை குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது.
2. மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக அந்தந்த பகுதியின் உள்ளூர் வளர்ச்சி தேவைகள் மற்றும் அடிப்படை பிரச்சனைகளை மையப்படுத்தி அறிக்கைகள் உள்ளன.
3. லக்னோவுக்கான சிறப்பு தேர்தல் அறிக்கை; தலைநகர் லக்னோவின் நகர்ப்புற கட்டமைப்பு, போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மெட்ரோ பயணம் ஆகியவை உள்ளடக்கிய பிரத்தியேக அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் முக்கிய வாக்குறுதிகளாக, பெண்களுக்கான ஓய்வூதியம் பார்க்கப்படுகிறது. அதாவது பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுயதொழில் தொடங்க ரூ.2 லட்சம் நிதியுதவி
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மீண்டும் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்
300 யூனிட் வரை இலவச மின்சாரம்
ஏழை மக்களுக்கு எவ்வித சுகாதார அட்டையும் இல்லாமல் இலவச மருத்துவ சிகிச்சை
ஆட்சி அமைத்த மூன்று மாதங்களுக்குள் மாநிலம் தழுவிய சாதி வாரி கணக்கெடுப்பு
2005க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்
வினாத்தாள் கசிவை தடுக்க கடுமையான சட்டம்
உள்ளிட்டவற்றை வாக்குறுதிகளாக அகிலேஷ் யாதவ் கொடுத்திருக்கிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த 2017 சட்டமன்ற தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்பு தான் சமாஜ்வாதி கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்தது. 2022 தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு வெறும் 2 நாட்களுக்கு முன்பு மட்டுமே தேர்தல் அறிக்கையை வெளியாகி இருந்தது. இப்படி இருக்கையில், இந்த முறை தேர்தல் அறிக்கை பரவலாக மக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும் என்பதற்காக.. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன்பே இந்த அறிக்கையை கட்சி வெளியிட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
