அன்று ஆளுநரை போஸ்ட்மேன்னு சொல்லிவிட்டு!இன்று அவர் வீட்டில் உதயநிதிக்கு என்ன வேலை? மாணிக்கம் தாகூர்
சென்னை: ஆளுநர் பதவியை போஸ்ட்மேன் என கூறிவிட்டு தற்போது அந்த போஸ்ட்மேன் வீட்டில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன வேலை என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும் விருதுநகர் எம்பியுமான மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இன்றைய தினம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்திருந்தார். இதை மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: ஆளுநரை போஸ்ட்மேன் என கூறியவர் உதயநிதி. ஆளுநரை Who are you? என கேட்டவர் உதயநிதி! தற்போது போஸ்ட்மேன் வீட்டில் உதயநிதிக்கு என்ன வேலை?

போஸ்ட்மேன்
ஆளுநரை போஸ்ட்மேன் என கூறியது யார் வாய்? ஆளுநரிடம் திமுக சரணடைந்துவிட்டதா, திமுகவுடன் டெல்லியுடன் செட்டிலாகிவிட்டதா? திமுக நிர்வாகிகள் மீதான அமலாக்கத் துறை வழக்குகளுக்காக செட்டில்மென்ட் முடிந்துவிட்டதா?
ஆளுநர் பதவி தேவை
ஆளுநர் பதவி வேண்டாம் என காங்கிரஸ் எப்போதும் சொன்னதில்லை. அரசியல் செய்யாமல் ஆளுநர் நடுநிலையோடு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு. மத்திய அரசுக்கு சரியான தகவலை கொடுக்க வேண்டும். மாநில அரசுக்கு உகந்து நடக்க வேண்டும்.
நடுநிலையோடு செயல்பட வேண்டும்
மாநில அரசுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை கொடுக்காத ஒரு ஆளுநர் இருக்க வேண்டும். தேவையில்லாமல் தனது சித்தாந்தத்தை மாநில அரசு மீது திணிக்கக் கூடாது. அதில் யாராவது வேறுபட்டால் அவர்களை கண்டிக்க அரசியல் கட்சிகளுக்கு முழு அதிகாரம் உண்டு. ஆளுநர் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்பதால் கல்வித் துறையில் அவரை மீறி எதையும் செய்ய முடியாது.
காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் ஆட்டுக்குத் தாடி எதற்கு, நாட்டுக்கு ஆளுநர் எதற்கு என்றெல்லாம் கேட்டதே இல்லை. ஆளுநர் பதவியே தேவையில்லை என சொல்லிவிட்டு இன்று போய் ஆளுநரை திமுக பார்த்தது ஏன்? காலம் காலமாக எதிர்த்துவிட்டு தற்போது வாலை சுருட்டிக் கொண்டு ஆளுநரிடம் போய் நின்றிருக்கிறது திமுக.
அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தை திருப்பூர் எஸ்பி விசாரித்து வருகிறார். விசாரணை நடக்கட்டும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு என்பது முக்கியமானது. காவிரி நீர் திறந்து விடாத கர்நாடகாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய உதயநிதி, கொச்சையாக பேசியிருந்தார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அப்படி பேசலாமா? உதயநிதியின் பேச்சுடன் வேறு எதையுமே ஒப்பிட முடியாத அளவுக்கு அத்தனை மோசமான பேச்சு அது!
உதயநிதியின் மோசமான பேச்சு
அவர் பேசிய பேச்சு இன்று வரை யூடியூபில் இருக்கிறது. அதற்காக மன்னிப்பாவது கேட்டாரா? "நான் தவறா சொல்லிவிட்டேன், வேறு அர்த்தத்தில் சொல்ல வந்தேன், அது வாய்த் தவறி வந்துவிட்டது. எனது நோக்கம் அப்படி சொல்வதில்லை" என்றாராவது உதயநிதி இதுவரை சொல்லியிருக்கிறாரா? ஆனால் அவர் சொன்னது என்ன, "நான் யாரையும் கொச்சப்படுத்தவில்லை, நீங்கள் புரிந்து கொண்டது தவறு" என்றாரே! என்னய்யா இது கூத்தா இருக்கு, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி பெண்களை கீழ்த்தரமாக பேசலாமா? ஆபாச மெசேஜ் விவகாரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதுதான் எனது கருத்து என மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார்.




Click it and Unblock the Notifications
