"2 ஆக உடையும் கர்நாடகா".. தனி மாநிலமாகும் வடகர்நாடகா மாவட்டங்கள் - பாஜக எம்எல்ஏ நம்பிக்கை
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள வடகர்நாடகா மாவட்டங்களை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது அங்குள்ள மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் தான்''கர்நாடகா 2 ஆக உடையும். வடகர்நாடகா மாவட்டங்கள் தனி மாநிலமாக உருவாகும். இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் இது நடக்கும்'' என்று கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ பாலசந்திர ஜார்கிகோளி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் வடகர்நாடகாவில் உள்ள பெலகாவி 'சுவர்ணா சவுதா'வில் நடக்கும். அதன்டி டிசம்பர் 2ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை பெலகாவி சுவர்ண சவுதாவில் கர்நாடகா குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும், பெலகாவி மாவட்டம் அரபாவி சட்டசபை தொகுதியின் பாஜக எம்எல்ஏவுமான பாலசந்திர ஜார்கிகோளி கூறியதாவது:
''கர்நாடகாவில் பெங்களூர் மட்டுமின்றி பெலகாவியிலும் சட்டசபை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது எதற்கு என்றால் வடகர்நாடகா மாவட்டங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்கு தான். ஆனால் ஆசைப்பட்டது போல் வடகர்நாடகா மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. வளர்ச்சி பணிகள் நடந்தாலும் அது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
இதனால் வடகர்நாடகாவை தனி மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. வடகர்நாடகா மாவட்டங்களை தனி மாநிலமாக்க வேண்டும்என்ற முன்னாள் அமைச்சர் உமேஷ் கத்தி (பாஜகவை சேர்ந்தவர்) கூறினார். அப்படி நடப்பது நல்லது என சில நேரங்களில் தோன்றுகிறது.
வடகர்நாடகா தனி மாநிலமானால் பெலகாவி தலைநகராக மாறும். இதனால் பெலகாவி மட்டுமின்றி மொத்த வடகர்நாடகா மாவட்டங்களும் வளர்ச்சி பெறும். வடகர்நாடகாவை தனி மாநிலமாக்கும் நடவடிக்கையை நோக்கி நகர இன்னும் 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால் உண்மையிலேயே இது நடக்கும்'' என்று நம்பிக்கையாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
