"டேய் நான் அப்பா ஆகிட்டேன்.. இனி உங்களோட சுத்தமுடியாது"னு சொன்ன இளைஞரை கொன்ற கொடூர நண்பர்கள்!
பெங்களூர்: ''டேய் எனக்கு திருமணம் ஆகிவிட்டது. மகளும் பிறந்துவிட்டாள். இனி உங்களுடன் சேர்ந்து சுத்த முடியாது. இனி குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். மகளுடன் நேரம் செலவிட வேண்டும். இதனால் நீங்கள் அழைக்கும்போதெல்லாம் என்னால் வர முடியாது'' என்று சொன்ன 22 வயது இளைஞரை அவரது நண்பர்கள் சேர்ந்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெங்களூரை அதிரவைத்துள்ளது.
அந்த நபருக்கு வயது வெறும் 22 தான். பெயர் அம்பார். பெங்களூர் ஹொரமாவு பகுதியில் வசித்து வந்தார். இவரது பெற்றோர் நேபாளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பே வேலை தேடி பெங்களூர் வந்தனர்.

இதனால் அம்பார் பெங்களூரில் தான் பிறந்தார். அம்பார் அதிகமாக படிக்கவில்லை. ஆனாலும் 'லிப்ட்' பழுது நீக்கும் பணியை கற்றுக்கொண்டார். இந்த பணி தான் அவரது குடும்பத்திற்கு சாப்பாடு போடுகிறது.
கடந்த 2024ம் ஆண்டில் அம்பாருக்கு திருமணம் முடிந்தது. மனைவி பெயர் பூஜா சேத்ரி. இந்த தம்பதிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது. வாய்ப்பு வசதி குறைவாக இருந்தாலும் கூட அம்பார் தனது மனைவி பூஜாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். தற்போது பெண் குழந்தை பிறந்ததால் கூடுதலாக உழைக்க வேண்டும் என்று நினைத்தார். தான் பட்ட கஷ்டங்களை தனது மகள் அனுபவிக்க கூடாது. மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். இதனால் கடினமாக உழைக்க வேண்டும் என்று அம்பார் முடிவெடுத்தார்.
கடந்த நவம்பர் 18 ம் தேதி வெளியே சில வேலைகள் இருப்பதாக தனது தாயிடம் கூறிவிட்டு அம்பார் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அதன்பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர், உறவினர்கள் போன் செய்து பார்த்தனர். ஆனால் போன் போகவில்லை. அவரது நெருக்கமான நண்பர்களான சையத் யூனுஸ் மற்றும் ஜுனைத் என்ற கோலி ஆகியோருக்கும் போன் செய்து பார்த்தனர். போன் 'ஸ்விட்ச்ஆப் என்று வந்தது. 2 நாட்களாக அம்பாரை குடும்பத்தினரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஹென்னூர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. கடந்த நவம்பர் 22ம் தேதி டிஜே ஹள்ளி போலீசாருக்கு ஒருதகவல் சென்றது. இந்த தகவலை கூறியது முகமது ஷாபி. வயது 61. இவர் அம்பாரின் நண்பர் சையத் யூனுஸின் தந்தை ஆவார். முகமது ஷாபி போலீசாரிடம், ''எனக்கு சொந்தமான முனீஸ்வராநகரில் உள்ள வீட்டின் 4வது மாடியில் உள்ள 'ஸ்டோர் ரூமில்' அம்பார் இறந்து கிடக்கிறார்'' என்று கூறினார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு டிஜே ஹள்ளி போலீசிடம் இருந்து அம்பார் குடும்பத்துக்கு போன் வந்தது. உடனடியாக அம்பேத்கர் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூறினர். அங்கு சென்று பார்த்தபோது அம்பார் இறந்திருந்தது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் நண்பர்களை புறக்கணித்ததால் அம்பாரை அவரது நண்பர்கள் சேர்ந்து கொன்றது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அம்பாரின் சகோதரர் நாகராஜ் கூறுகையில், ''என்னுடைய சகோதரர் அம்பாருக்கு சையத் யூனுஸ், ஜுனைத் என்ற கோலி மற்றும் இன்னும் சிலர் நண்பர்களாக உள்ளனர். இவர்களுடன் அம்பார் நெருக்கமாக செயல்பட்டு வந்தார். சில நேரங்களில் ஒருநாள், 2 நாள் வரை வீட்டுக்கு வராமல் நண்பர்களுடனே இருப்பார். திருமணமான பிறகு அம்பார், நண்பர்களுடன் நேரம் செலவிடுவதை குறைத்தார். இதனால் அக்டோபர் மாதத்தி்ல அவரை அவருடைய நண்பர்கள் தாக்கினர். இதில் காயமடைந்தார். போலீசில் புகாரளிக்க முடிவெடுத்தபோது நண்பர்கள் தானே என்று வேண்டாம் எனஅம்பார் தடுத்தார்.
அதன்பிறகு அம்பாருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் நண்பர்களுடன் சேர்ந்து சுத்துவதை தவிர்த்தார். இதனால் கோபமான நண்பர்கள் அவரை அடித்து கொன்றுள்ளார். சையத் யூனுஸ் என்ற நண்பனின் வீட்டு மாடியில் அம்பாரை அழைத்து சென்று அடித்து கொன்றுள்ளனர்'' என்று புகாரளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பாரை கொலை செய்ததாக தமீம் (23), முகமது முதாசீர் (22), சையத் யூனுஸ் (24) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
