கிண்டி வரை போயிருச்சு திமுக! ஆனா அருள் விக்னேஷ் விவகாரம், விஜய் ஆட்சி பற்றி திருமாவளவன் கணக்கு இதுவே
சென்னை: "அருள் விக்னேஷ் தவெக எம்எல்ஏ விவகாரத்தில், சிபிஐ விசாரணை தேவையில்லை. மாநில அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கையில் நம்பிக்கை உள்ளது" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் தான் எதிர்பார்க்கவில்லை என திருமா சொல்லியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது.

கவர்னர் வரை போன திமுக
கலெக்டர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஆளும் தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்றும் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்த திமுக, இப்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரையும் சந்தித்து மனு அளித்துள்ளது. இந்த வழக்கில் மாநில அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும் திமுக தெரிவித்துள்ளது.
திருமாவளவன் கருத்து
இந்த விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அருள் விக்னேஷ் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.. தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் விவகாரம் குறித்து விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
"கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ விவகாரத்தில் மாநில அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கையில் நம்பிக்கை உள்ளது. அதனால் இந்த வழக்கி சிபிஐ விசாரணை தேவையில்லை. தவெக எம்எல்ஏ விவகாரத்தில் அரசு வேகமாக செயல்படுகிறது. புகார் கொடுத்து எத்தனை நாள் ஆகிறது என்பதே முக்கியம். இந்த பிரச்சனை ஆட்சியை கவிழ்க்க கூடிய அளவுக்கு அல்லது ஆட்சியை இழக்கக்கூடிய அளவுக்கு அழுத்தத்தை தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, நம்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
திருமா சொல்வதென்ன
திருமாவளவனின் இந்த கருத்து அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. அருள் விக்னேஷ் மீதான புகாரில் மாநில போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதன் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் என்பதே அவரது அணுகுமுறையாக தெரிகிறது. அதனால்தான் இப்போதே சிபிஐ விசாரணை தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல், இந்த விவகாரத்தை வைத்து விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் தனக்கு இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.. அதாவது, ஒரு எம்எல்ஏ மீதான புகாரையும், ஒட்டுமொத்த ஆட்சியின் எதிர்காலத்தையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்பதையே அவரது கருத்து உணர்த்துகிறது.
இப்போது இந்த வழக்கில் மாநில போலீசார் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள்தான் முக்கியம். புகார் மீதான விசாரணை எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் நேர்மையாக நடைபெற்று, உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்...!!




Click it and Unblock the Notifications
