நீதிமன்ற அவமதிப்பு! தமிழக அரசை சஸ்பெண்ட் செய்ய சுப்ரீம் கோர்ட் திட்டம்? 1992 சுனில் வரலாறு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், இப்போது வெறும் ஆன்மீகப் பிரச்சனையாக மட்டுமல்லாமல், தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையிலான மிகப்பெரிய சட்டப் போராட்டமாக மாறியுள்ளது. முக்கியமாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் சார்ந்த பிரச்சனையாக மாறி உள்ளது.

ஒரு வழக்கை இங்கே உதாரணமாக சொல்லலாம்.. ஒரு பெரிய அரசியல்வாதி.. அவர் எக்ஸ் என்ற கட்சியை சேர்ந்தவர்... உ.பியில் உள்ளவர் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு கொலை செய்கிறார். அங்கே அந்த எக்ஸ் கட்சிதான் ஆளும் கட்சி என்றும் வைத்துக்கொள்வோம். இப்போது அவர் செய்த கொலைக்கு.. அவருக்கு ஆளும் தண்டனை. உடனே போலீஸ் என்ன செய்ய வேண்டும்? அவரை கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

Thirupparangundram Lamp Contempt

ஆனால் அரசு என்ன சொல்கிறது.. நாங்கள் கைது செய்யாமல் விட்டுவிட்டோம்.. மன்னித்துவிடுங்கள் என்கிறது. ஆனால் அந்த அரசியல்வாதி பொதுவில் சுற்றிக்கொண்டுதான் சுதந்திரமாக இருக்கிறார். கைது செய்ய வேண்டிய போலீஸ் அதிகாரியோ.. மன்னிப்பு கேட்டுவிட்டு.. எனக்கு கைது செய்யும் உத்தரவே வரவில்லை என்கிறார்.. இன்னொரு பக்கம் விலங்கு காணவில்லை அதனால் கைது செய்யவில்லை என்கிறார் என்றால்.. அது வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நேரும் அவமானம் தானே? அதோடு தீர்ப்பை அமல்படுத்த தவறிய அரசு மீது கோர்ட் ஆக்சன் எடுக்கும் தானே?

இப்போது திருப்பரங்குன்றம் அவமதிப்பிற்கு வருவோம்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் எது சரி.. எது தவறு என்பதால் நாம் சொல்ல முடியாது.. கோர்ட் மட்டுமே சொல்ல முடியும்.. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்தும், உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தும் தீபம் ஏற்றப்படாததால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசு மீது பிரிவு 355 அல்லது 356ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நடந்தது என்ன?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் (இதை வழக்கு தொடுத்த இந்து அமைப்பினர் தீபத்தூண் என்கிறார்கள்) கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், கடந்த நவம்பர் 20, 2026 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு ஒரு முக்கிய இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 24, மட்டும் ஒருமுறை நடவடிக்கையாக, கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்றும், இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், நவம்பர் 23-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் காட்டி முன்னர் 144 என்று அழைக்கப்பட்டு இப்போது பிஎன்எஸ்சில் மாற்றப்பட்ட பிரிவு 163-ன் கீழ் மாவட்டத்தில் தடையுத்தரவு பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நவம்பர் 24-ம் தேதி அவசர வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவோம் என மதுரை ஹைகோர்ட் கிளை ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வில் அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், சீராய்வு மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்ற உத்தரவைத் தடுக்க முடியாது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்தது. ஆனால் சீராய்வு மனு அதுவரை விசாரணைக்கே வரவில்லை. லிஸ்ட் ஆனால்தான் அது நிலுவையில் இருப்பதாக கருதப்படும்.

ஆனால், நவம்பர் 24-ம் தேதி மாலை வழக்கமான உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது.. உச்ச நீதிமன்றம் அனுமதித்த மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து, நவம்பர் 25-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, கோவில் அறங்காவலர் குழு அனுமதிக்காததால் தீபம் ஏற்ற முடியவில்லை எனக் கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அதோடு அங்கே தீபம் ஏற்ற ரெடியாக இருந்ததாகவும் கோவில் தேவசாணம் போர்ட் விளக்கு ஏற்ற தேவையான குழுவை அனுப்பவில்லை என்றார்.

இதை ஏற்க மறுத்த மனுதாரர்கள், மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், முதலமைச்சர் விஜய் அல்லது அமைச்சர்கள் உத்தரவைத் தடுக்கச் சொன்னார்களா என்பதை விசாரிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் கீழ் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

தற்போதைய சிக்கல் ஏன் பெரிது?

பொதுவாக, காவிரி நதிநீர் பங்கீடு போன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தண்ணீர் திறக்கச் சொன்னால், அது செய்யாமல் கர்நாடக அரசு தவறி இருக்கிறது. ஆனால் அதுவும் இதுவும் வேறு வேறு.. கர்நாடக அரசு அணையில் போதிய தண்ணீர் இல்லை, வறட்சி நிலவுகிறது என்ற காரணங்களைக் காட்டித் தப்பிக்க முடியும். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரம் அப்படிப்பட்டதல்ல. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், கோவில் நிர்வாகத்தின் சில நபர்களைக் கொண்டு ஒரு தீபத்தை ஏற்றுவது அரசுக்கு மிக எளிதான காரியம். அதைச் செய்யத் தவறியது வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என்ற கடுமையான பார்வையை உருவாக்கியுள்ளது. தமிழக அரசு என்ன.. எண்ணெய் கிடைக்கவில்லை என்றா சொல்ல முடியும்.. அல்லது விஜய்தான் மகேஷ் பாபு நடித்த ஒக்கடு (கில்லி) நெய் நெய் காமெடியை சொல்லி.. திரி ஏற்ற நெய் விளக்கு கிடைக்கவில்லை என்று சொல்லி தப்பிக்க முடியுமா?

இங்குதான் விஜய் அரசு சிக்கலில் மாட்டி உள்ளது.

கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே விவகாரத்தில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற உத்தரவிட்டபோது, அப்போதைய திமுக அரசு அதைச் செயல்படுத்தவில்லை. ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. அப்போது திமுக அரசு நாங்கள் தீபம் ஏற்றுவோம என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்துவிட்டுப் பின்வாங்கவில்லை.. மாறாக, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைக் கூறி மேல்முறையீடு செய்தது. ஆனால், தற்போதைய தவெக அரசு, உச்ச நீதிமன்றத்தின் நேரடி உத்தரவு வந்த பிறகும், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உத்தரவாதம் அளித்துவிட்டு, கடைசி நேரத்தில் தீபம் ஏற்றாமல் பின்வாங்கியிருப்பது கடும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சரியாக சொல்லப்போனால் திமுக செய்தது சட்ட மோதல்.. தவெக செய்தது பொய் நாடகம்.. சரி பாஸ் இதனால் அரசு எப்படி சஸ்பெண்ட் ஆகும் என்று என்று கேட்கிறீர்களா?

1992 கே.பி. சுனில் வழக்கு: ஜெயலலிதா அரசுக்கு உச்ச நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை!

நீதிமன்ற உத்தரவை ஒரு மாநில அரசு மதிக்காமல் போனால் என்ன நடக்கும் என்பதற்கு 1992-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஒரு வரலாற்றுச் சம்பவமே சாட்சி.

1988 ஜனவரி மாதம் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி வி.என். ஜானகி முதலமைச்சராகப் பதவியேற்றார். 23 நாட்கள் மட்டுமே நீடித்த அவரது ஆட்சியில், ஜனவரி 28, 1988 அன்று சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பெரும் கலவரம் வெடித்தது. சபாநாயகர் பி.எச். பாண்டியன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ததால், அவைக்குள் மைக்குகளும் நாற்காலிகளும் வீசப்பட்டன.

சட்டசபைக்குள் மார்ஷல் மட்டுமே இருப்பார்கள்.. போலீசுக்கு அனுமதி இல்லை.. ஆனால் அதை மீறி வரலாற்றில் முதல்முறையாக சட்டப்பேரவைக்குள் போலீசார் நுழைந்து எம்எல்ஏக்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து ஆளுநர் எஸ்.எல். குரானாவின் அறிக்கையை ஏற்று, ஜனவரி 30, 1988 அன்று மத்திய அரசு ஜானகி ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.

இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, 1991 செப்டம்பர் மாதம் தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா இதழில் பத்திரிகையாளர் கே.பி. சுனில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார். எம்எல்ஏக்கள் வெட்டி கிழிந்ததை.. வாங்கிய அறைகளில் எம்எல்ஏக்கள் கன்னம் சிவந்ததை எல்லாம் விரிவாக எழுதினார்... இதை படித்து பார்த்த ஜெயலலிதா கண்கள் சிவந்தது!

இதற்கு எதிராக, 1992 ஏப்ரல் மாதம் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா பத்திரிகையாளர் கே.பி. சுனில் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து, அவரைக் கைது செய்து சபையில் ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பித்தார்.

இதை எதிர்த்து கே.பி. சுனில் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். 1992 ஏப்ரல் 24 அன்று உச்ச நீதிமன்றம் அந்தக் கைது வாரண்டிற்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு எங்களைக் கட்டுப்படுத்தாது, சுனிலைக் கைது செய்யுங்கள் என சபாநாயகர் முத்தையா தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதனால் உச்ச நீதிமன்றத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே நேரடி மோதல் உருவானது.

அப்போது, மே 7, 1992 அன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தது. உங்கள் அரசையே 355 சட்ட பிரிவின் கீழ் சஸ்பென்ட் செய்வோம் என்றது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 144ன் கீழ், நாட்டின் அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். சட்டசபைக்கு உள்ளே சபாநாயகர் எடுப்பதே இறுதி முடிவு என்றாலும்.. இந்த விவகாரத்தில்தான் அந்த பவர் செல்லாது.

ஒரு மாநில அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க மறுத்தால், அது அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைந்ததாகக் கருதப்பட்டு, மத்திய அரசு தலையிட நேரிடும் எனச் சட்ட வல்லுநர்கள் எச்சரித்தனர். இதன் அடிப்படையிலேயே உங்கள் அரசையே 355 சட்ட பிரிவின் கீழ் சஸ்பென்ட் செய்வோம் என்றது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, ஆட்சிக்கு ஆபத்து வருவதை உணர்ந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, சபாநாயகர் பிடிவாதமாக இருந்தபோதிலும், காவல்துறை மூலம் கே.பி. சுனிலைக் கைது செய்ய வேண்டாம் என உத்தரவிட்டுப் பின்வாங்கினார்.

பிரிவு 144, 355 மற்றும் 356 என்றால் என்ன? அரசு முடக்கப்பட்டால் என்ன நடக்கும்?

தற்போதைய திருப்பரங்குன்றம் வழக்கிலும், மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிரிவு 144 சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர் என எச்சரித்திருந்தது. ஒருவேளை உச்ச நீதிமன்ற உத்தரவை மாநில அரசு அவமதிப்பதாக நீதிமன்றம் கருதினால், அரசியலமைப்புச் சட்டத்தின் 3 முக்கியப் பிரிவுகள் பேசுபொருளாகும்

1. பிரிவு 144 - இந்திய எல்லைக்குள் இருக்கும் அனைத்து அரசு அதிகாரிகளும் அதாவது முதல்வர், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், ஆட்சியர், காவல்துறை உட்பட எல்லோரும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும். இதை மீறுவது நேரடி அரசியலமைப்பு விதிமீறலாகும்.

2. பிரிவு 356 (ஆட்சி கலைப்பு): ஒரு மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி நடக்கவில்லை என ஆளுநர் அறிக்கை அளித்தாலோ அல்லது மத்திய அரசு கருதினாலோ, அந்த மாநில அரசை முழுமையாகக் கலைத்துவிட்டு, சட்டப்பேரவையை முடக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். 1988-ல் ஜானகி அரசு கலைக்கப்பட்டது இந்தப் பிரிவின் கீழ்தான்.

3. பிரிவு 355 (சட்டப்பேரவை முடக்கம் அதாவது Suspension): பிரிவு 355-ன் படி, ஒவ்வொரு மாநில அரசும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி, மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தாலோ அல்லது பிரிவு 355-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ, ஆட்சியைக் கலைக்காமல் தற்காலிகமாக முடக்கி வைக்க வாய்ப்புள்ளது.

ஆட்சி முடக்கப்பட்டால் (Suspension) என்ன நடக்கும்?

ஆட்சி கலைக்கப்பட்டால் மட்டுமே உடனடியாகத் தேர்தல் வரும். ஆனால், முடக்கி வைக்கப்பட்டால் , தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பதவியில் இருப்பார்கள்.. உடனடியாகத் தேர்தல் நடக்காது. முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் அதிகாரங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆளுநர் மூலமாக நிர்வாகம் நடைபெறும் அல்லது நேரடியாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும்.

பொதுவாக 6 மாத காலத்திற்குள் நிலைமை சீரானால்.. மீண்டும் பெரும்பான்மையை நிரூபித்து.. அதை நிரூபிப்பவரின் தலைமையின் கீழ் புதிய ஆட்சி அமைக்கப்படும். அதாவது பெரும்பான்மை எம்எல்ஏ உள்ள கட்சி அமைக்க உரிமை கோரினால், முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டு மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமையும்.

ஒருவேளை 6 மாதங்களுக்குப் பிறகும் சுமுக நிலை ஏற்படவில்லை என்றால் மட்டுமே, சட்டப்பேரவை கலைக்கப்பட்டு தேர்தலுக்குச் செல்ல நேரிடும்.

நாளை உச்ச நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதிகாரிகள் மீதான நடவடிக்கையோடு நிற்குமா அல்லது தவெக அரசுக்குக் கடுமையான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+