தங்க நகைக்கடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்.. கண்காணிக்க வேண்டிய நிலுவை தொகை சிக்கல்
ஹைதராபாத்: இந்தியாவில் தங்கக்கடன் சந்தை ரூ.23 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டிலேயே அதிக தங்க நகைக்கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு ரூ.6.9 லட்சம் கோடி நிலுவைத் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது போல் அடுத்தடுத்த இடங்களில் தென்னிந்திய மாநிலங்களே உள்ளன.
இந்தியாவில் தங்கம் எங்கே அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால், அது தென்னிந்தியாவில் தான் அதிகம் இருப்பதாக தெரிகிறது. இது உண்மையாக கூட இருக்கலாம். ஏனெனில் தென்னிந்தியாவில் தான் தங்க நகைக்கடன் அதிகமாக இருக்கிறது. தங்கத்தை வைத்து கடன் பெறுவது என்பது தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறது. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளாவிலும் உள்ளது.

நகைக்கடன் ஏன்
மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து மிகக்குறைந்த வட்டியில் கடன் பெறுகிறார்கள். அந்த பணத்தை வைத்து குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துகிறார்கள். தங்கள் இல்லங்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு பயன்படுத்துகிறார்கள். மருத்துவ செலவுக்கு பயன்படுத்துகிறார்கள். அதேபோல் வீடு வாங்க, நிலம் வாங்க மற்றும் பல்வேறு முதலீடுகளுக்காகவும் தங்கத்தை அடமானம் வைக்கிறார்கள். தங்க நகைக்கடனுக்குத்தான் இருப்பதிலேயே வட்டி குறைவாக உள்ளது. எனவே இந்த கடனை தான் மக்கள்அதிகம் விரும்புகிறார்கள். இதன் காரணமாக இந்தியாவில் தங்கக்கடன் சந்தை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
தங்க நகைக்கடன்
இது தொடார்பான புள்ளி விவரங்களை சி.ஆர்.ஐ.எப் கிரெடிட் இன்பர்மேஷன் சர்வீசஸ் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையின் படி, நடப்பு நிதியாண்டில் 2-ம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தங்கக்கடன் சந்தை இந்தியாவில் 60.6 சதவீதம் உயர்ந்தது.அதாவது கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.23 லட்சத்து 3 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2024-ல் 2-ம் காலாண்டில் ரூ.10.7 லட்சம் கோடியாக இருந்த இந்த மதிப்பு, நடப்பு ஆண்டில் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் சிறிய நகரங்களில் வசிப்பவர்களின் பங்களிப்பு இந்த நகைக்கடன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
தமிழ்நாடு முதலிடம்
தென்னிந்திய மாநிலங்கள் தங்க நகைக்கடன் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் ரூ.6.9 லட்சம் கோடி நிலுவைக் கடனுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. ஆந்திரப் பிரதேசம் ரூ.3.7 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்திலும், கர்நாடகா ரூ.2.4 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. தெலங்கானா ரூ.2.1 லட்சம் கோடியுடனும், கேரளா ரூ.1.7 லட்சம் கோடியுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து ரூ.16.8 லட்சம் கோடி தங்க நகைக்கடன் நிலுவையில் உள்ளது. இது இந்தியாவின் மொத்த தங்க நகைக்கடன் நிலுவையான ரூ.23.3 லட்சம் கோடியில் சுமார் 72 சதவீதமாகும். அதேநேரம் இது புதிதாக வழங்கப்பட்ட கடன்களின் மொத்த மதிப்பு கிடையாது. ஏற்கெனவே வழங்கப்பட்டு, 2026 செப்டம்பர் நிலவரப்படி திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள கடன்களின் மதிப்பு அகும்.
புதிய கடனாளார்கள் 45.7 லட்சம் பேர்
தங்கக்கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை 2023 செப்டம்பரில் 3.7 கோடியாக இருந்தது. ஆனால் 2026 செப்டம்பரில் 5.6 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் பெண் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை 2.4 கோடியாக உள்ளது. இது மொத்த தங்கக் கடன் சந்தையில் 42.2 சதவீதமாக இருக்கிறது. , நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் மட்டும் 45.7 லட்சம் புதிய கடன் வாங்குபவர்கள் இணைந்துள்ளனர். அதேசமயம், ஜூன் மற்றும் செப்டம்பர் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் கடன் திருப்பிச் செலுத்துவதில் சிறிய அளவிலான சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே கடன் அபாயங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
