விஜய் உத்தரவிட்டாரா? திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றாத விவகாரத்தில் ராமரவிக்குமார் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
டெல்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாததற்கு தமிழக முதல்வர் விஜய்யோ அல்லது அவரது அமைச்சர்களோ ஏதேனும் அறிவுறுத்தல்களை வழங்கினார்களா? என உச்சநீதிமன்றத்தில் புதிய நீதிமன்ற அவதூறு மனுவை வழக்கின் மூல மனுதாரரான ராமரவிக்குமார் தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று முதல் முதலில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ராமரவிக்குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
''திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் உச்சநீதிமன்ற உத்தரவிட்டும் கார்த்திகை நாளில் தீபம் ஏற்றவில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பதினொரு அரசு அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறியதற்கான பொறுப்பு, அதை செயல்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது.
ஏனென்றால் அந்த உத்தரவு மீறலின் மூல காரணத்தை கண்டறிய வேண்டும். தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாததற்கு தமிழக முதல்வர் விஜய்யோ அல்லது அவரது அமைச்சர்களோ ஏதேனும் அறிவுறுத்தல்களை வழங்கினார்களா? என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் இந்த வழக்கு வெறும் ஒரு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறியது மட்டுமல்ல. அந்த உத்தரவை செயல்படுத்துவதை திட்டமிட்டு தடுத்தது தொடர்பானதாக உள்ளது. இதனால் தமிழக தலைமைச் செயலாளர், அரசு மட்டத்தில் எடுக்கப்பட்ட செயல்முறை குறித்த முழு விவரங்களையும், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பங்கு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் தனது தனிப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
அதோடு இந்த விவகாரத்தில் அரசியல் மற்றுமு் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட கோப்பு குறிப்புகள், ஆலோசனை கூட்டங்கள், உளவுத்துறை அறிக்கை, இ-மெயில் தகவல்பரிமாற்றம் உள்ளிட்டவற்றை பாதுகாத்து அதனை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏழு நாட்களுக்குள் தீபத்தூணில் விளக்கேற்ற உத்தரவிட வேண்டும்'' என கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
