31 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இழப்பீடு! விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் கோர்ட் அதிகாரிகள் ஜப்தி
விழுப்புரம்: நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகையை நீதிமன்ற உத்தரவின்படி வழங்காததால், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்த பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அண்ட்ராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (64). ஓய்வுபெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியரான இவருக்குச் சொந்தமான 111 சென்ட் நிலத்தை, கடந்த 1995-ம் ஆண்டு ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்தியது.

இதற்கு ஒரு சென்ட்டுக்கு ரூ.50 இழப்பீடாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதனை உயர்த்தி வழங்கக் கோரி ராஜா விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு சென்ட்டுக்கு ரூ.400 வீதம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இருப்பினும் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், கடந்த 2004-ம் ஆண்டு வழக்கறிஞர் தரணிவேந்தன் மூலம் ராஜா மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், வட்டியுடன் சேர்த்து இழப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டது. இதன்படி ரூ.8 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.9 லட்சத்து 37 ஆயிரத்து 944 வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது.
இதையடுத்து ராஜா மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி பாரதி, கடந்த 28.10.2026 அன்று பிறப்பித்த உத்தரவில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும், தவறினால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்தும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து ராஜா, அவரது வழக்கறிஞர் தரணிவேந்தன் மற்றும் நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் உமாபதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜப்தி நடவடிக்கைக்காக வந்தனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, மின்விசிறி, பீரோ, கணினி உள்ளிட்ட பொருட்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் அரசுத் துறை அலுவலகப் பொருட்களே ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Click it and Unblock the Notifications
