தவெக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் டிச.2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்.. இறங்கி அடிக்கும் எடப்பாடி
சென்னை: தவெக அரசுக்கு எதிராக வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவின் 85 அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், மேகதாது பிரச்சனையில் தவெக அரசு மவுனம் காப்பதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுக்கின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்திருக்கிறது.
3 மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டவர்கள், 6 மாத காலம் நிறைவு பெற்றிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய துயரமாக மாறி நிற்கிறார்கள். இந்த அரசாங்கம் அமைந்த முதல் நாள் தொட்டு தமிழ்நாட்டினுடைய மாநில உரிமைகளை அடகு வைக்கத் தொடங்கிவிட்டது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்து வெளிவந்த 'ஜனநாயகன்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியிடப்படுகிற நாள் வரை, காவிரியில் நமக்கு இருக்கின்ற உரிமை குறித்தோ, மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்கிற நிலைப்பாடு குறித்தோ முதலமைச்சர் ஜோசப் விஜய் எதுவுமே வாய் திறந்து பேசவில்லை. இதனால், ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட்டு, குறுவை சாகுபடி முழுமையாக இல்லை என்கிற ஒரு கொடூரமான நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்தும், செப்டம்பர் 1-ந் தேதி முதல் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு நீர் திறக்கப்படுகிறது என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், கடைமடை வரை நீர் சென்றடையவில்லை. சம்பா சாகுபடி செய்கிற விவசாயிகளும் இன்றைக்குச் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். ஆனால், இதுகுறித்தெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது.
அதேபோல, 'மேகதாதுவிலே அணை கட்டுவோம்', 'யார் சொல்லியும் கேட்க மாட்டோம்' என்று கர்நாடகா மாநில முதலமைச்சர் ஆணவப் போக்கோடு தொடர்ந்து பேசி வரும் காட்சிகளைப் பார்க்கின்றோம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிற ஜோசப் விஜய், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுப்பதற்கு உருப்படியான எந்த வேலையும் செய்யாமல், தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
காங்கிரஸ் தலைவர்களுடன் மேகதாது பிரச்சனை குறித்துப் பேசுவதற்கோ, கர்நாடகாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சரிடம் இதுகுறித்துப் பேசிப் புரிய வைப்பதற்கோ ஜோசப் விஜய் எள்ளளவும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.
'தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்; சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடங்குங்கள்' என்று எவ்வளவோ முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தியும் கேட்கவில்லை.
அதேபோல, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை இன்றைக்கு மிக மோசமாக இருக்கிறது. ரூ.1,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் தவெக நிர்வாகியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இந்த ஆண்டிலேயே அதிக அளவிலான போதைப்பொருள் பறிமுதல் என்று சொல்லி, போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசின் கீழ் இயங்குகின்ற வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) மேற்கொள்கிறது.
தமிழ்நாடு காவல்துறையோ, உளவுத்துறையோ இதனைக் கண்டறியவுமில்லை; இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கு பார்த்தாலும் கூலிப்படைகளின் கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு, கொலைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பல்கிப் பெருகிக்கொண்டே இருக்கின்றன. கொலை நடப்பதெல்லாம் சகஜம்தான் என்கிற தொனியில் தவெக அமைச்சர்கள் சாதாரணமாகப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
குற்றவாளிகளைப் பிடித்துச் சிறையில் அடைத்தால், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்து, சிறை நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று அரசுக்குப் பாடம் எடுக்கின்ற காட்சிகள் இன்றைக்கு ஊடகங்களில் வெளியாகின்றன. காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிற கைதிகளும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற கைதிகளும் தப்பித்து வெளியேறுவது தொடர்கதையாகி இருக்கிறது.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான கொடுமைகள் சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்துகின்றன. செஞ்சி அருகே காணாமல் போன குழந்தை, இன்றைக்கு வரைக்கும் கண்டுபிடிக்கப்படாத சூழல் இருக்கிறது.
'எங்கும் போதை, எதிலும் போதை' என்கிற அளவுக்கு மாநிலமே தள்ளாடுகின்ற ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றபோதும், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இதுகுறித்த புரிதல்கூட இல்லாமல் பொம்மை போல் அமர்ந்திருக்கிறார் என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு விஷயம்.
சட்டம்-ஒழுங்கு ஒரு பக்கம் சமூக விரோதிகளால் சீரழிக்கப்படுகிறது என்றால், இன்னொரு பக்கம் வேலியே பயிரை மேய்வது போல, தவெகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பியது குறித்து நீதிமன்றம் வரை சென்ற பிறகே, தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
துறையூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினராகவும், துணை சபாநாயகராகவும் இருப்பவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப் போனவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும், பின்னர் காவல்துறையை வைத்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வேன் என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், குற்றச்சாட்டாகவே இன்னும் தொடர்வதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தவெக அமைச்சர் காந்திராஜ் இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, ஆய்வு செய்கிறேன் என்று சொல்லி, பணியில் இருந்த பெண் காவலரை விசாரிக்கின்ற காட்சிகள் வெளிவந்திருக்கின்றன.
இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது மட்டுமல்லாமல், அவரிடம் கேள்வி கேட்டு, அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் ஓர் அமைச்சர் பரவ விடுகிறார் என்று சொன்னால், அவர் மீது நடவடிக்கை எடுப்பது யார்?
தவெகவைச் சேர்ந்த ஈரோடு மாவட்ட அமைச்சர் ஒருவர், 'இரவு நேரத்தில் கோப்புகளை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்' என்று சம்பந்தப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்துகொண்டிருக்கிறது.
தவெகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் தொடர்புடையவர் என்று மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் மத்தியில் சொல்லியும், புகார் பதிவு செய்யப்படாமல், விசாரணை நடத்தப்படாமல், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் கிடைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது இந்தப் பொய்க்கால் குதிரை அரசு.
அதேபோல, இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, சாதாரண எளிய மக்களின் வாழ்க்கையைப் பெரும் துயரமாக மாற்றியிருக்கிறார்கள். அரிசி கிலோ ரூ.100-க்கு மேல் உயர்ந்துள்ளதோடு, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் பலமடங்கு உயர்ந்திருக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
அதேபோல, மின்கட்டணம் 3 மடங்கு, 4 மடங்கு உயர்ந்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து வந்த பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மின்கட்டணச் சுமையைத் தமிழ்நாட்டு மக்களின் தலையில் ஏற்றிக்கொண்டிருக்கிறது இந்தத் தவெக அரசு.
மேலும், தமிழ்நாடு முழுவதிலும் ஆங்காங்கே தொடர் மின்வெட்டுகள் ஏற்படுவதன் காரணமாக, மக்கள் பல்வேறு வகையில் சிரமப்படுகின்ற துர்பாக்கிய நிலை இந்த ஆட்சியில் நிலவுகிறது.
சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது தவெக கொடுத்த வாக்குறுதிகளான, 'ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம்; விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்; குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும்' என்கிற எந்த வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்படாத சூழலில், விலைவாசி உயர்வும், மின்கட்டண உயர்வும் சாதாரண மக்களை வாட்டி வதைக்கின்ற காட்சிகளைக் காண்கிறோம்.
இதுகுறித்தெல்லாம் நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக அரசை வலியுறுத்தினால், பொறுப்புள்ள முறையில் முதலமைச்சர் உள்ளிட்ட எந்த அமைச்சரும் ஒருநாளும் பதில் சொல்வதும் இல்லை; நடவடிக்கை எடுப்பதுமில்லை.
எனவே, மக்கள் விரோத தவெக ரீல்ஸ் மாடல் ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கின்ற வகையிலும், அவர்களுடைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியை மக்கள் மன்றத்திலே அம்பலப்படுத்துகின்ற வகையிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில், டிசம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணியளவில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ரீல்ஸ் மாடல் ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளையும், மக்கள் விரோதச் செயல்களையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், மகளிர் மற்றும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான முறையில் நடத்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
