தவெக, திமுக.. மாறாத ஒரே முடிவு! 172 ஏக்கர் மலை, 33 சென்ட் நிலம்.. 100 ஆண்டு வரலாறை சொன்ன திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக ஆட்சியாக இருந்தாலும், தவெக ஆட்சியாக இருந்தாலும் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் மோதலை உருவாக்க முயற்சி நடப்பதாகவும், மதத்தின் பெயரால் மக்கள் பிளவுபட்டு விடக்கூடாது என்றும் திருமா எச்சரித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் உலகத் தமிழ்சங்கம் அருகே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் ஆற்றிய உரை சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.. அதன் சுருக்கத்தை இங்கே பார்க்கலாம்..!!

Thirumavalavan TVK DMK

திருமாவளவன் பேச்சு

"தமிழகத்தில் ஆட்சியாளர்கள் மாறினாலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு மாறவில்லை. கடந்த திமுக அரசும், தற்போதைய அரசும் ஒரே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அரசு பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக முடிவெடுக்கிறதா அல்லது சிறுபான்மை சமூகத்தினருக்காக இந்த நிலைப்பாட்டை எடுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பி பார்க்க வேண்டும்.

இது பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரச்சினை அல்ல. காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறை எதுவோ, அதற்கு ஏற்ற வகையில் அரசின் நிலைப்பாடு இருக்க வேண்டும். உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் பாரம்பரியமாகத் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. புதிதாக மற்றொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலைப்பாடும் இதுதான்.

இந்துக்கள் - முஸ்லிம்கள்

நாங்கள் இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கூடவில்லை. இந்துக்களுக்கும், சங்கிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. நாங்கள் விமர்சிப்பது அரசியல் நோக்கத்துடன் செயல்படுபவர்களைத்தான். முருக பக்தர்களையோ, கார்த்திகை தீபத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களையோ எதிர்க்கவில்லை. இந்தப் பிரச்சினை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. அப்போது சங்கிகள் இருந்தார்களா? இல்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பிரச்சினை இருந்தது. அப்போது பிரச்சினை தீபம் ஏற்றுவது தொடர்பானதாக இல்லை.. நில உரிமை தொடர்பானதாக இருந்தது.

திருப்பரங்குன்றம் மலை 172 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மலையின் உச்சியில் தர்கா உள்ளது. மலையின் நடுப்பகுதியில் பிள்ளையார் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் ஆகியவை உள்ளன. மலையடிவாரத்தில் இருந்து தர்கா மற்றும் கோயில்களுக்குச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன.

திருப்பரங்குன்றம் மலை - தர்கா

ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஒரே பாதையாகவும், அதன்பிறகு கோயிலுக்கும் தர்காவுக்கும் செல்லும் வகையில் இரு பாதைகளாகவும் பிரிகின்றன. 172 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலையில் கோயிலுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு? தர்காவுக்குச் சொந்தமான நிலம் எவ்வளவு? எஞ்சிய நிலம் யாருக்குச் சொந்தமானது என்பதுதான் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட கேள்வி.

சிக்கந்தர் பாதுஷா என்ற சூபி 600 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட இடமே தர்காவாக உள்ளது. அந்த இடத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும், அங்கு செல்வதற்கான படிக்கட்டுகளையும் இஸ்லாமியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தர்கா அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட 33 சென்ட் நிலம் தொடர்பாக உரிமை கோரப்படுகிறது. அதே மலையில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும் அமைந்துள்ளன. தமிழர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் எனப் பல்வேறு தரப்பினரின் வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட சிறப்புமிக்க மலையாகத் திருப்பரங்குன்றம் திகழ்கிறது.

இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அனுமதியின்றி மரங்களை வெட்டவோ, வேறு எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவோ முடியாது. எனவே, தொடக்கத்தில் இருந்தே இந்தப் பிரச்சினை நில உரிமை மற்றும் வழிபாட்டுப் பாதை தொடர்பானதாகவே இருந்து வருகிறது. 1923-ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து 1931-ஆம் ஆண்டு லண்டனிலும் வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை.

தமிழக அரசு நிலைப்பாடு

தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு கடந்த திமுக அரசு எடுத்த நிலைப்பாடுதான். ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசின் முடிவு மாறவில்லை. பெரும்பான்மை, சிறுபான்மை என்பது அல்ல. காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நடைமுறை எதுவோ, அந்த நடைமுறைக்கு ஏதுவாக அரசு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

திமுக ஆட்சியின் போதும் சரி, தவெக ஆட்சியின் போதும் சரி, இரண்டு அரசு தரப்பு சார்ந்தவர்களும் ஆட்சியாளர்களும் எடுத்திருக்கிற முடிவு, காலம் காலமாக வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவதுதான் நடைமுறை. புதிதாக இன்னொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல என்பதுதான் அரசு நிலைப்பாடு.

மதரீதியாக பிளவு

தமிழ்நாட்டு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்த முடியவில்லை. அதனால் தான் இப்போது சாதி அடிப்படையில் பிளவுபடுத்த துவங்கியுள்ளார்கள். 15 ஆண்டுக்கு முன்னால் ஒரே மேடையில் இருந்த தலித் தலைவர்கள் இப்போது ஒன்றாக இருக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இந்து - முஸ்லீம் பிளவை உருவாக்குவதற்கான களமாக மதுரையை மாற்ற முயல்கிறார்கள்.

மதத்தின் பெயரால் மக்களே பிளவுபட்டு விடாதீர்கள். சங்கி கும்பல் விரிக்கும் சதி வலையில் யாரும் சிக்கிக்கொள்ளாதீர்கள். கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற இந்துக்களின் உணர்வை மதிக்கிறோம். வழக்கமாக ஏற்றப்பட்ட இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும்.

எந்த அடிப்படையில் ஒருமுறை தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என சொன்னார்கள் என தெரியவில்லை. இது பாபர் மசூதி இடிப்பு வழக்கை போலுள்ளது. நாம் போராடி ஒரு உரிமையை பெற்றால் அதை தடுப்பதற்கு நீதிமன்றத்தையே பயன்படுத்துகிறார்கள்.

நில உரிமை தொடர்பான பிரச்சினைதான் முதலில் இருந்தது. 1931-இல் லண்டன் பிரிவியூ கவுன்சில் தீர்ப்பளித்தது. அப்போதெல்லாம் தீபம் தொடர்பான பிரச்சினையே கிடையாது. இப்போது சர்வேக்கல்லா? தீபத்தூணா? என்று சொல்லக்கூடிய தீபத்தூணைப் பற்றி யோசிக்கவே இல்லை. இந்தப் பிரச்சினையை இந்து முன்னணி 1990-இல் திடீரெனக் கிளப்புகிறார்கள். இந்தத் தூண் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டது; அங்குதான் தீபம் ஏற்றுவோம் எனக் கூறினார்கள்.

உச்சிப்பிள்ளையார் கோவில் மகா தீபம்

அந்தத் தூண் பாதுகாப்பான இடம் கிடையாது. அந்தக் கல் அடிப்பகுதி, நுனிப்பகுதி தீபம் ஏற்றத் தகுதி வாய்ந்ததா? என விவாதத்துக்கு உட்பட்டது. 400 லிட்டர் நெய் ஊற்றி, பல மீட்டர் காடா துணியால் திரி செய்து தான் தீபத்தை ஏற்றுவார்கள். அப்படி ஏற்றினால்தான் அடிவாரத்தில் உள்ள மக்களுக்கு அது தெரியும். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுகிறார்கள்.

எந்த ஒரு மலை உச்சியிலும் தீபம் ஏற்றினால் அது மகா தீபம். இங்கு மகா தீபம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் இருக்கிற தீப மண்டபத்தில் ஏற்றப்படுகிறது. வெட்ட வெளியில் காற்று அடிக்கும்; அது தொடர்ந்து எரிய முடியாது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+