மதுரை கலெக்டர், கமிஷனர் 12:30 மணிக்கு நேரில் ஆஜராகணும்.. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு உத்தரவு
மதுரை: திருப்பரங்குன்றத்தில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு தொடர்பாக, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோரை மதியம் 12:30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இந்து அமைப்புகள் குறிப்பிடும் சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவாக தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. அங்கு இன்று தீபம் ஏற்றப்படுமா அல்லது 144 தடை உத்தரவு போட்டு, சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, கடந்த ஆண்டைப் போலவே நிறைவேற்றாமல் தடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

ஆனால் இதுவரை அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றி, தீபம் ஏற்றப்படும் என்று எந்த இடத்திலும் தமிழக அரசு உறுதி அளிக்கவில்லை. அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்படாது என்றும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்து அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு வருகிறார்கள். சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் திருப்பரங்குன்றத்தில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் திருப்பரங்குன்றத்தில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 163-ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு முதல் டிவிஷன் பெஞ்ச் அமர்வான நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பு இன்றே விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோரை மதியம் 12:30 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று மதியம் நேரில் ஆஜராகும் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக இன்று எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் தடை உத்தரவு பிறப்பித்தது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனினும் இரு மத விவகாரம் என்பதால் அரசு மிகவும் கவனமாகக் கையாண்டு வருகிறது என்பதை விளக்கமாக அளிக்கவும் வாய்ப்பு உள்ளது. திருப்பரங்குன்றத்தில் உச்சிப் பிள்ளையார் கோவில் தவிர, தர்கா அருகே இன்று தீபம் ஏற்றப்படுமா அல்லது இல்லையா என்பது இன்னும் சில மணி நேரத்தில் நீதிமன்ற விசாரணையின்போது தெரிந்துவிடும்.




Click it and Unblock the Notifications
