கள்ளக்குறிச்சி கலெக்டர் புகார்! சீல் வைக்கப்பட்ட ரிப்போர்ட்டுடன் கோர்ட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு எதிரான வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வழக்கில் விளக்கமளிப்பதற்காக, கள்ளக்குறிச்சி நகர காவல் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீஸ் குழுவினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடங்கிய சீல் வைக்கப்பட்ட கோப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நேரில் வருகை தந்துள்ளனர்.
நேற்று நடந்த விசாரணையும் நீதிபதியின் உத்தரவும்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்.ல்ஏ அருள் விக்னேஷ் தகாத முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தொல்லை கொடுத்ததாகவும் எழுந்த புகாரின் பேரில், எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து தலைமைச் செயலாளருக்கோ அல்லது காவல்துறைக்கோ இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நீதிபதி, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காதபோது காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் தலைமைச் செயலாளரிடமும் மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதிப்படுத்திவிட்டு நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
திடீர் திருப்பம்: எஸ்பி-யிடம் புகார் அளித்த ஆட்சியர்
உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, நேற்று பிற்பகலில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகாரை அளித்தார் என்று தி இந்து ஊடகம் செய்தி வெளியிட்டது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ தன்னிடம் தகாத முறையில் அணுகியதாகவும், தனது உடை குறித்துக் கருத்துத் தெரிவித்ததாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சீல் வைக்கப்பட்ட அறிக்கையுடன் நீதிமன்றம் வந்த போலீஸ்
இந்நிலையில், நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், காவல்துறை தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் அவரது குழுவினர், இந்த விவகாரம் தொடர்பாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தயாரித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை அடங்கிய சீல் வைக்கப்பட்ட ரகசியக் கோப்புடன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நேரில் வந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள புகாரின் விவரங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்கள் ஆகியவற்றை அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் மூலமாக நீதிபதியிடம் சமர்ப்பித்து விளக்கமளிக்க காவல்துறையினர் தயாராக உள்ளனர்.
புகாரே இல்லை என்று அரசுத் தரப்பு கூறிய நிலையில், ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்ததும், இன்று காவல்துறை சீல் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையுடன் நீதிமன்றத்திற்கு வந்திருப்பதும் இந்த வழக்கில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
